சமையல் காஸ் நிரப்பும், ‘பாட்டிலிங் பிளான்டு’களில், போனஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது; இதனால், காஸ் வினியோகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம், காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், சென்னையில் எண்ணூர், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, திருச்சி, சேலம் மாவட்டம் கருப்பூர், மயிலாடுதுறை, மதுரை ஆகிய இடங்களில், காஸ் நிரப்பும், ‘பாட்டிலிங் பிளான்டு’கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து, சுற்றியுள்ள மூன்று முதல் ஐந்து மாவட் டங்கள் வரையிலான ஏஜன்சிகளுக்கு, காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில், எண்ணூர் மற்றும் கோவை மாவட்டம் கிணத்துக் கடவுவில் செயல்படும், ‘பாட்டிலிங் பிளான்டு’களில் காஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், போனஸ் அதிகரிக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளொன்றுக்கு 50 முதல் 75 லோடு என்ற அளவில் நடந்த காஸ் நிரப்பும் பணி, தற்போது 25 லோடுகளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், இங்கிருந்து சப்ளையாகும் மாவட்டங்களுக்கு, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து, காஸ் சிலிண்டர்களை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பிளான்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, பெருந் துறை, சேலம் கருப்பூரில் இருந்து சிலிண்டர்கள் அனுப்பப்படுகின்றன. எண்ணூர் பகுதிக்கு திருச்சி, மயிலாடுதுறையில் இருந்து, சிலிண்டர்கள் அனுப்படுகின் றன. மதுரை, மயிலாடுதுறை ஆகிய ‘பிளான்டு’களிலும் தொழிலாளர்கள், ‘ஸ்டிரைக்’கில் ஈடுபட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், ஐ.ஓ.சி.,யால் வினியோகிக்கப்படும் காஸ் சிலிண்டர்கள், பதிவு செய்து 20 நாள் கழித்தே, வினியோகம் செய்யப்படுகிறது. தொழிலாளர் போனஸ் பிரச்னை தீராத பட்சத்தில், போராட்டம் தீவிரமாகும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.
காஸ் ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் காஸ் நிரப்பும் பிளான்டுகளில் பணி புரியும் தொழிலாளர்கள், போனஸ் பிரச்னையை காரணம் காட்டி, உள்ளிருப்பு போராட்டம், பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், காஸ் நிரப்பும் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏஜன்சிகள் புக்கிங் செய்து 10 நாட்களுக்கு பின், குறைந்த அளவிலேயே சிலிண்டர்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால், பதிவு செய்துள்ளவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், சிலிண்டர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சிலிண்டர்களுக்கு மட்டுமின்றி, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின், காஸ் சிலிண்டர் வினியோகமும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply