வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையங்களில், மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டது. வாலிபர் ஒருவர் கைது மூலம், இச்சதி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தாரீக் மெகன்னா (27) என்பவனை, பாஸ்டன் நகரில் போலீசார் கைது செய்தனர். இவன், அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவது குறித்து தன் கூட்டாளிகளுடன் ஆலோசித்துள்ளான். தானியங்கி துப்பாக்கிகளைப் பெறுவது மற்றும் வர்த்தக மையங்களில் கண்மூடித்தனமாக, மக்கள் மீது தாக்குதல் நடத்துவது எப்படி என்பது குறித்தும், மெகன்னா தன் கூட்டாளிகளுடன் விவாதித்துள்ளான். இருந்தாலும், அவர்களால் தானியங்கி துப்பாக்கிகளைப் பெற முடியவில்லை. எனவே, தாக்குதல் திட்டத்தை கைவிட்டுள்ளனர். எப்.பி.ஐ.,யின் பயங்கரவாத அதிரடிப்படை குழுவினருக்கு தவறான தகவல்களை தெரிவித்ததாக, கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவன் மெகன்னா என்பது குறிப்பிடத்தக்கது. மெகன்னாவின் கைதை தொடர்ந்து, அவனது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவன் மீது கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்படும். கடந்த 2004ம் ஆண்டில் மெகன்னாவும், அவனின் கூட்டாளிகள் இருவரும் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்று பயங்கரவாத பயிற்சி பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, மெகன்னாவின் கூட்டாளிகளில் இருவர், 2002ம் ஆண்டில் இரு முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளனர்.இவ்வாறு எப்.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Leave a Reply