ராஜசேகர ரெட்டி கொலை : குடும்ப பத்திரிகை தகவல்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_5889528990ஐதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, “விபத்தில் சாகவில்லை; திட்டமிட்டே கொல்லப்பட்டார்’ என அவரது குடும்ப பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா சித்தூருக்கு செப்.,2ம் தேதி அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.

நல்லமலா மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து ராஜசேகர ரெட்டி உட்பட அவருடன் சென்ற ஐந்து பேர் பலியாகினர். விபத்திற்கு மோசமான வானிலையே காரணம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரெட்டியின் குடும்ப பத்திரிகையான “சாட்சி’ அக்.20ல், அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. முதல் பக்கத்தில் வெளியான அதில், மூன்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

* முதலாவதாக ராஜசேகர ரெட்டியின் முக்கிய உதவியாளராக இருந்த பானுவின் பதவிக்காலம் அண்மையில் முடிந்தது. பதவிநீட்டிப்பு செய்து ஆந்திர அரசு முன்வந்தாலும் அதை ஏற்க மறுத்து சொந்த மாநிலமான அசாமுக்கு சென்றுவிட்டார் பானு. இதன் பின்னணி என்ன. ராஜசேகர ரெட்டியின் மரண உண்மை எப்படியும் அம்பலமாகிவிடும். அது அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என பயந்து அசாமுக்கு சென்றுவிட்டார்.

* அசாமுக்கு புறப்படும் முன் ஆந்திர விமானப் போக்குவரத்து அகாடமி தலைவர் பிரமானந்த் ரெட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. முதல்வர் ரோசையாவுக்கு ஒரு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்ய முடியாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு உயரதிகாரியை சஸ்பெண்ட் செய்ய இந்த காரணம் போதுமானதா? ராஜசேகர ரெட்டியின் மிகவும் நெருங்கிய நண்பரான பிரமானந்த ரெட்டி, விமானப்போக்குவரத்து அகாடமி தலைவராக நீடித்தால் ரகசியத்தை கண்டுபிடித்து அம்பலப்படுத்துவார் என்று ராஜசேகர ரெட்டி மரணத்தின் பின்னணியில் இருக்கும் பானு உட்பட சிலர் கருதினர். கடும் அச்சுறுத்தலாக இருப்பார் என கருதியதால் பிரமானந்த ரெட்டியை திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

* ஹெலிகாப்டர் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவான தகவல்களை ஏன் இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்கள். அந்த தகவல்களை வெளிப்படுத்த ஒரு “டிவி’ சேனல் முயற்சித்தது. அலறியபடி ராஜசேகர ரெட்டி, “இடியட்’ என பைலட்டை கடுமையாக திட்டியது பதிவாகியுள்ளதாக அம்பலப்படுத்திவிட்டது. சில நிமிடங்களில் அந்த செய்தி நிறுத்தப்பட்டது. ஸ்குரோலிங் வார்த்தைகளும் ஓடவில்லை. கூடுதலாக தகவல்களை திரட்டிய அந்த சேனல் நிர்வாகத்திடம், “காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர் தகவல் பற்றி எந்தவொரு செய்தியும் வெளியிட வேண்டாம். இப்பிரச்னையை இதோடு விட்டு விட வேண்டும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக, சில சந்தேகங்கள் ஏற்படுகின்றன. ராஜசேகர ரெட்டி, பைலட்டை கோபமாக ஏன் திட்டினார். ஹெலிகாப்டர் நொறுங்கும் முன் சதி ஏதோ நடக்க போவதை அறிந்து அப்படி திட்டினாரா?. இதுபோல சந்தேகங்கள் பலவற்றை எழுப்பிய அந்த செய்தியின் கடைசியில், “ராஜ சேகர ரெட்டியின் சாவுக்கு ஹெலிகாப்டர் காரணமேயல்ல. திட்டமிட்டே கொல்லப்பட்டார்’ என முடிக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *