கோவை விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நேற்று தத்ரூபமாக நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்துக்குள் சென்றதால் பயணிகள் பரபரப்படைந்தனர்.
நேற்று, மாலை 4.15 மணிக்கு, கோவை பீளமேடு விமான நிலையத்தில் நின்றிருந்த ஒரு விமானத்துக்குள் புகுந்த “பயங்கரவாதிகள்’ பைலட்டை மடக்கி விமானத்தை கடத்தப் போகும் செய்தி, விமான நிலைய அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமான நிலைய அதிகாரி, கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தார். அதிரடியாக, கமிஷனர் சிவனாண்டி, துணை கமிஷனர்களுடன் விமான நிலையத்துக்கு விரைந்தார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி மற்றும் இயக்குனருடன் ஆலோசனை நடத்தப்பட்டு, பைலட் அறையில் இருந்த “பயங்கரவாதியிடம்’ பேச்சு நடத்தப்பட்டது. இதற்கிடையில், விமானத்தைச் சுற்றிலும் துப்பாக்கியுடன் கமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் விமானம் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். ஒரு மணி நேரம் நடந்த இந்த நடவடிக்கை மாலை 5.15க்கு முடிவுக்கு வந்தது. பரபரப்பு ஓய்ந்த பின் தான் நடந்தது “ஒத்திகை’ என அறிந்து பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர்.
Leave a Reply