சென்னை: விமான பணிப்பெண் மரணம் குறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் அவரது தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். பீகார் மாநிலம் சாகர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிஜய் குமார் பகத் என்பவர் சார்பில், வக்கீல் பழனிமுத்து தாக்கல் செய்த மனு
: எனது மகள் நீதிகுமாரி, ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். நெற்குன்றத்தில் கோல்டன் ஜார்ஜ் நகரில் தங்கியிருந்தார். கடந்த மே மாதம் 23ம் தேதி, வீட்டில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி, அம்பத்தூர் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். ரிமாண்ட் அறிக்கையில், அவரது வயது 22 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், திருத்தம் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் அவரது வயது 19 என கூறப்பட்டுள்ளது.
இவரை தப்பிக்க வைப்பதற்காக போலீசார் செயல்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள கல்லூரி நண்பர் ராஜாத் சிங் என்பவர், சம்பவம் நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். எனது மகளை திருமணம் செய்ய விரும்பினார். மூத்த சகோதரி இருப்பதால், திருமணத்துக்கு எனது மகள் மறுப்பு தெரிவித்தார். உடனே திருமணம் செய்ய ஒப்புக் கொள்ளாததால், இந்தக் கொலையை ராஜாத் சிங் செய்திருக்க வாய்ப்பு உள்ளது. வீட்டின் உரிமையாளரும் முறையாக எங்களுக்கு பதிலளிக்கவில்லை.
எனது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நீதிகுமாரி எங்கே என தெரியாது என்றும் அவர் பதிலளித்துள்ளார். எனது மனைவியின் வற்புறுத்தலின் பேரில் தான், போலீசில் வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். புலன் விசாரணையின் போது, நீதிகுமாரியை திருமணம் செய்ததாகவும், ஆனால், வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றும் ராஜாத்சிங் தெரிவித்துள்ளார். எனது மகள் கொலை குறித்து சென்னை நகர போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. எனது மகள் கொலையில் சந்தேகங்கள் தொடர்கின்றன. எனவே, எனது மகள் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply