புதுடெல்லி, : அடுத்த ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 9 சதவீத ஊதிய உயர்வை கம்பெனிகள் அளிக்க உள்ளதாக சர்வதேச முன்னணி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இதுபற்றி ஹெவிட் அசோசியேட்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவு தலைவர் சந்தீப் சவுத்ரி கூறியதாவது:
இந்திய நிறுவனங்கள் புத்துணர்ச்சி பெற்று வருகின்றன. எனவே, 2010ல் புதிதாக நிறைய ஊழியர்களை பணியில் சேர்க்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அத்துடன், சராசரியாக 9.2 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப் போகின்றன. இது இந்த ஆண்டில் 6.3 சதவீதமாக இருந்தது. சம்பள உயர்வு இரட்டை இலக்கத்தைத் தொடப் போவதில்லை என்றாலும்,
இந்த ஆண்டை விட அதிகமாகவும், பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். எனினும், ஊழியர்களிடையே சம்பள உயர்வு அளவைத் தீர்மானிப்பதில் பணித் திறன், உற்பத்தி பற்றிய அளவுகோல் நீடிக்கும். சிறந்த பணித்திறனை வெளிப்படுத்தும் ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு, ஊக்கத் தொகையை நிறுவனங்கள் உறுதி செய்யும் என்றார். ஆசிய பசிபிக் நாடுகளுக்கான சம்பள உயர்வு ஆய்வு&2010ஐ ஹெவிட் அசோசியேட்ஸ் வெளியிட்டது. ஆசிய நாடுகளில் 13 முக்கிய துறைகளைச் சேர்ந்த 238 பெரிய நிறுவனங்களிடம் ஆய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply