தகவல்தொடர்புத்துறையில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 60000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.
“”தொலைத்தொடர்புத் துறையில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கடைப்பிடிக்கப்பட்ட உரிமம் வழங்கு நடைமுறை காரணமாக அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது; நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த ஊழல்களிலேயே பண அளவில் இதுதான் மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. டெலிகாம் துறையில் நடந்துள்ள இந்த ஊழலை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும்போது, அமைச்சர் ஆ. ராசா ஏதும் அறியாதவர் என்று பிரதமர் மன்மோகன் அறிவிப்பது விசாரணை அமைப்பைத் தடுமாறச் செய்யும்; முறையான, நேர்மையான விசாரணை நடைபெற அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசா விலக வேண்டும்” என்றார் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி (பாஜக).
தொலைத்தொடர்பு (டெலிகாம்) அலுவலகங்களில் மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) திடீர் ஆய்வு நடத்தி ஆவணங்களையும் பதிவேடுகளையும் கோப்புகளையும் ஆராய்ந்து வருகிறது. சி.பி.ஐ.க்கு பொறுப்பான பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். “டெலிகாம்’ துறை அமைச்சர் அப்பாவி, குற்றமற்றவர் என்பதைப் போலப் பேசுவது விசாரணையைத் தடுமாறச் செய்யும். அதிகாரிகள் இதைப் பிரதமர் விரும்பவில்லை என்று குறிப்பால் உணர்ந்து முறையாக விசாரிக்காமல் விட்டுவிடக்கூடும்.
பொதுவாழ்வில் நேர்மை தேவை என்று கூறும் பிரதமரே, விசாரணையைச் சீர்குலைக்கும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது. விசாரணை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற ஏதுவாக அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசா விலக வேண்டும், அல்லது பிரதமர் அவரை விலக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளிடம் விசாரணை நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் கூறுவது ஏற்க முடியாதது. அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் இந்த அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் முடிவுகளை அதிகாரிகள் எடுக்கமாட்டார்கள். “”அமைச்சர் அப்பாவி, அதிகாரிகள்தான் ஊழல் செய்துள்ளனர்” என்று விசாரணையின் முடிவு அமைந்துவிடக்கூடாது. அதிகாரிகள் எப்போதுமே அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றுகிறவர்கள்தான். இத்துறையின் முக்கிய முடிவுகளை அமைச்சர் ஆ. ராசாதான் எடுத்திருக்கிறார் என்பதால் அவர் விசாரணைக்கும், பிற நடவடிக்கைகளுக்கும் உள்பட்டவரே.
2-ஜி அலைக்கற்றை யாருக்கெல்லாம் ஒதுக்கப்பட்டதோ அவர்கள் அந்த சேவையில் ஈடுபடவே இல்லை. அவர்களிடமிருந்ததெல்லாம் பெயரளவுக்கான நிறுவனங்கள்தான். அவர்களுக்கான ஒப்பந்தமும் வருவாயும் உறுதி செய்யப்பட்டவை. இத்துறையில் அன்னிய நேரடி முதலீடு 74% அளவு வரை இருக்கலாம் என்ற அரசின் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு சர்வதேசச் சந்தையிலிருந்து வர்த்தகக் கூட்டாளிகளையும் கூட்டு நிறுவனத்துக்கான பங்குதாரர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளனர். அந்த நிறுவனங்களின் மதிப்பு சந்தையில் திடீரென ரூ.9,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. அத்துடன் 3 உரிமதாரர்கள் தங்களுடைய நிறுவனங்களின் பெரும்பான்மையான பங்குகளை ரூ.6,000 கோடி ரூ.7,000 கோடி வரை விலை வைத்து விற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
ஒவ்வொரு அலைக்கற்றையின் விலையும் ரூ.9,000 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் ஒவ்வொரு உரிமதாரர் மூலம் அரசுக்குக் குறைந்தபட்சம் ரூ.7,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படி மொத்தம் 9 உரிமதாரர்கள். சாதாரணமாக கணக்கிட்டாலே அரசுக்கு இதில் வருவாய் இழப்பு ரூ.60,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு எடுத்த முடிவின்படி ஏலம் கோர முடியும் என்றால், 2-ஜி அலைக்கற்றைக்கும் அதே கொள்கை ஏன் பின்பற்றப்படவில்லை?
இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அல்ல, தில்லி உயர் நீதிமன்றத்தின் கருத்துகள்; இத்துறையில் அனுபவம் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் அனுபவமே இல்லாத 9 பேருக்கு வாய்ப்பு தரும் வகையில் ஏலத் தேதி ஏன் நிர்ணயிக்கப்பட்டது, அது செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
2007 அக்டோபர் 1 வரையில்தான் மனுக்கள் பெறப்பட்டுள்ளன; அதில் செயற்கையாக 2007 செப்டம்பர் 25 என்று கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டது. செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 1 வரையில் பெறப்பட்ட மனுக்கள் அப்படியே நிராகரிக்கப்பட்டன. விளையாட்டு தொடங்கிய பிறகு விளையாட்டுக்கான விதிகள் மாற்றப்பட்டன. வேண்டப்பட்ட மனுதாரர்கள் மட்டும் செப்டம்பர் 25-க்குள் மனுச்செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள்.
“டிராய்’ பரிந்துரை அப்படியே பின்பற்றப்பட்டது என்று மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார். “”உரிமம் வழங்க 2001-ல் நிர்ணயிக்கப்பட்ட விலை உண்மை நிலைமையைப் பிரதிபலிப்பது அல்ல; சந்தை நிலவரத்தைப் பொறுத்து அதிக வருவாய் கிடைக்கும்படியான வழியில்தான் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றுதான் டிராய் கூறியிருக்கிறது’ என்றார் அருண் ஜேட்லி.
mano
en rasai, pulla ,kutti unda. gandhi told to dissolve congress after independence. Nehru family said no. Now we face the music