மும்பை : மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை “ஓட்டி’க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. “மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில், “தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஷாருக்கான், கஜோல், மந்திரா பேடி இருவரும் நடித்த இந்தப் படம் வெளிவந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. மேட்னி ஷோவில் மட்டும் இந்தப் படம் தொடர்ந்து 14 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.குறைந்த டிக்கெட் 18 ரூபாய். பால்கனி 22 ரூபாய். தம்பதிகள் தங்கள் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக 10 ரூபாயில் பாப்கார்ன் வாங்கிக் கொண்டு இந்தப் படம் பார்க்க வந்து விடுகின்றனர். மணிக்கணக்கில் உட்கார்ந்து படத்தை பார்த்தும், பேசிக்கொண்டிருந்தும் விட்டு கிளம்புகின்றனர். ” இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நான் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தை நான் மிகவும் விரும்புகிறேன்’ என்று சிலர் கூறியது வித்தியாசமாக இருந்தது.
வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தியேட்டரில் சுமாரான கூட்டம் தான் இருக்கும்; அப்போதெல்லாம் தியேட்டரின் ஓரளவு வசூலுக்கு கைகொடுப்பது காதலர்கள் தான்; அவர்கள், தங்கள் ரொமான்சை அரங்கேற்றுவதற்காக இந்தத் தியேட்டருக்கு வருகின்றனர். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்தத் தியேட்டர் நிரம்பி வழிகிறது; காரணம், ஷாருக்கின் இந்த படம் அருமையானது என்பதே. இந்தத் தீபாவளியோடு இந்தப் படம் வந்து 730 வாரங்கள் ஓடிவிட்டன. ஆனாலும், இன்னும் இந்தப் படம் இளைஞர்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டுதானிருக்கிறது.
Leave a Reply