புதுடெல்லி, : அமெரிக்காவில் கைதான லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதி ஹெட்லி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன் அவன் டெல்லி ஓட்டல்களில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.
அவனை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியும் அவனது கூட்டாளி தகாவூர் ஹூசைன் ராணாவும் அமெரிக்காவில் எப்.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஹெட்லியிடம் நடத்திய விசாரணையில் அவன் டெல்லியில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரி உள்பட இந்தியாவில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், அவன் மீது தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஹெட்லி பற்றி அவர்கள் கூறியதாவது: ஹெட்லி பல முறை இந்தியாவுக்கு வந்து இருக்கிறான். மும்பை தாக்குதலுக்கு முன் அவன் டெல்லியில் உள்ள 2 ஓட்டல்களில் தங்கி இருந்தான். அந்த ஒட்டல்களில் விசாரணை நடத்தினோம். அவனது பாஸ்போர்ட் விவரங்கள் கிடைத்தன. அவன் இந்தியாவில் மொத்தம் 12 மாதங்கள் தங்கி இருந்து இருக்கிறான். பாகிஸ்தான், அபுதாபி உள்பட பல நாடுகளுக்கு டெலிபோனில் பேசி இருக்கிறான். அதுபற்றி விசாரணை நடத்த ஒரு குழு அபுதாபி செல்கிறது. பலரது செல்போன்களுக்கு பேசி உள்ளான். இந்தியாவில் எந்தெந்த நகரங்களுக்கு அவன் பயணம் செய்தான் என்பது பற்றி விமான நிறுவனங்கள், ரயில்வேயிடம் விவரம் சேகரித்து வருகிறோம்.
இந்தியாவில் 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பல்வேறு நகரங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் அவனுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினர். மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஹெட்லிக்கு லஸ்கர்&இ&தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. அந்த ஆதாரங்களை வரும் ஜனவரியில் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துவோம்Ó என்றார்.
Leave a Reply