அமெரிக்க பெண்ணுக்கு ரூ.1,500 கோடி இழப்பீடு

posted in: உலகம் | 0

wl41நியூயார்க் : அமெரிக்காவில் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 16 ஆண்டுகள் ஆகியும் நுரையீரல் பாதிப்பால் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு சிகரெட் நிறுவனம் ரூ.1,500 கோடி இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமெரிக்க வரலாற்றில் சிகரெட் நிறுவனம் இதுவரை இல்லாத அதிக தொகை இழப்பீடு அளிக்க உத்தரவிட்டு வெளியாகியுள்ள தீர்ப்பு இது என கருதப்படுகிறது. அந்நாட்டில், 2006ம் ஆண்டு முதல் சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கியது.

புளோரிடாவைச் சேர்ந்த பெண் சின்டி நாகிள். வயது 61. இவர் 1968ல் தனது 20வது வயதில் சிகரெட் பிடிக்கத் தொடங்கினார். அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான பிலிப் மோரிஸ் சிகரெட்களை சின்டி புகைத்து வந்துள்ளார்.பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது நுரையீரலை எம்பைசிமா என்ற நோய் தாக்கியது. நுரையீரலின் காற்றுப் பாதைகளில் அடைப்பை ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும் நோய் இது. இதனால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை அறிந்து 1993ல் அந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டார் சின்டி.

அதன்பிறகு என்பைசிமா நோய்க்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். 16 ஆண்டுகள் கடந்தும் குணமாகாமல், சக்கர நாற்காலியில் நாட்களைக் கடத்தும் நிலைக்கு வந்து விட்டார். இதையடுத்து, சிகரெட்டை நிறுத்தி 16 ஆண்டுகளாகியும் பாதிப்பு தொடர பிலிப் மோரிஸ் நிறுவனமே காரணம் என்று குற்றம்சாட்டி புளோரிடா நீதிமன்றத்தில் சின்டி வழக்கு தொடர்ந்தார்.

இதுபோல, 6,000 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சின்டி வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மனுதாரரின் கடந்த கால மற்றும் எதிர்கால மருத்துவ செலவாக ரூ.250 கோடியும், இழப்பீடாக ரூ.1,250 கோடியும் பிலிப் மோரிஸ் சிகரெட் நிறுவனம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக அந்நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *