அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்

posted in: அரசியல் | 0

ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற “காந்திய அரசியல் இயக்கம்’ தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:

ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் முன்பு அரசியல்வாதிகளிடம் இருந்தது. தேர்தலில் வெற்றிபெற புதிய வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

வாக்குச் சாவடியில் எதிர்க்கட்சி ஏஜெண்டுகளுக்கு கரன்சிகளைக் கொடுத்து தங்கள் வழிக்கு கொண்டுவரவும், ஓட்டுப் போட மக்களுக்கு பணம் கொடுக்கவும் கற்றுக் கொண்டு விட்டார்கள். மக்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டார்கள்.

காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தவர்கள் கூட மாற்றுக் கட்சியினரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, “நாங்கள் நாணயமானவர்கள். பணம் கொடுத்த உங்களை ஏமாற்ற மாட்டோம்’ என்று சொன்ன சம்பவங்களை சில அதிகாரிகள் சொல்லக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கிராம மக்களும், ஏழைகளும் நல்லவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தது தவறாகிவிட்டது. மக்களிடம் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது.

சாதாரண மனிதர்களுக்கு குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருக்கும்போது அரசியல்வாதிகள் செல்வச் செழிப்போடு இருப்பதைப் பார்த்து பொறுக்காமல்தான் வன்முறைப் பாதைக்கு இளைஞர்கள் செல்கின்றனர். ஜார்க்கண்டிலும், மேற்கு வங்கத்திலும் இதுதான் நடக்கிறது. தமிழகத்திலும் அதுபோன்ற நிலை வரலாம்.

ஏனெனில் ஒரு தொழிற்சாலைக்கு சான்றிதழ் வழங்க கிராம பஞ்சாயத்து தலைவர்களும், வார்டு உறுப்பினர்களும் ஆளுக்கொரு சொகுசு கார் கேட்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. கட்சிகளில் பணியாற்றி என் மனம் வெறுத்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் தமிழருவி மணியன் காந்திய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். கிராமத்துக்கு 10 இளைஞர்களைத் திரட்டி சாதித்துக் காட்டுவேன் என்று அவர் என்னிடம் சவால் விட்டுள்ளார். அந்த சவாலில் அவர் வெற்றிபெற வேண்டும் என்றார் முருகன்.
ஆர். நல்லகண்ணு: “மிகச்சிறிய நாடான இலங்கையின் ராஜதந்திரம் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை வீழ்த்திவிட்டது’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லுகண்ணு தெரிவித்தார்.

இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு இந்திய அரசு ரூ. 500 கோடி வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளை வீழ்த்திவிட்டதாக இலங்கை மண்ணை முத்தமிட்ட ராஜபட்ச, “”இந்தியா செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டேன்” என்று கூறினார்.

மிகச்சிறிய நாடான இலங்கையின் ராஜதந்திரம் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை வீழ்த்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழருவி மணியன்: “காந்திய அரசியல் இயக்கம்’ ஒருபோதும் தேர்தலில் போட்டியிடாது. திருமங்கலம் தேர்தலுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையே போய்விட்டது. காந்திய கொள்கைகளான அகிம்சை, மதுவிலக்கு, கிராம முன்னேற்றம் ஆகியவற்றை கிராமங்களில் பிரசாரம் செய்வதே இந்த இயக்கத்தின் பணியாக இருக்கும்” என்றார்.

நடிகர் சிவகுமார்: நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற துடிப்புடன் ஏராளமானோர் இன்றும் இருக்கின்றனர். அவர்களுக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

பத்திரிகையாளர் சுதாங்கன், ஏ. போஸ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *