காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதன் விவரம் வருமாறு:கே:சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுமா?ப: சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல்படுத்துவது. அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகளை ஒன்றாக இணைத்து ஒரே போர்டின் கீழ் கொண்டு வருவது தான் சமச்சீர் கல்வி திட்டம். தற்போது எந்த மொழியில் படிக்கின்றனரோ அதே போல் சமச்சீர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் அதே மொழியில் படிக்க முடியும். தமிழ் வழி பாடத்திட்டத்திலிருந்து, ஆங்கில வழி பாடத்திட்டத்திற்கு மாற விரும்பும் மாணவர்கள் எந்தப் பள்ளியில் ஆங்கில வழி பயிற்றுமொழியாக உள்ளதோ அந்தப் பள்ளிக்கு மாறிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இருவேறு பயிற்று மொழி வசதியினை அரசு பள்ளிகளில் ஏற்படுத்துவது இயலாத காரியம். ஏனெனில், அதிக அளவில் ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை தேவைப்படும். உடற்பயிற்சி கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் அமைக்கப்படும்.
கே: பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளில், முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளதே?
ப:எங்கெங்கு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதோ அங்கு விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.ஆசிரியர்கள் இல்லாமல் விரைவில் பொதுத் தேர்வை சந்திக்க உள்ள மாணவர்கள் நிலை குறித்து கேட்டதற்கு, “அது தான் சொல்லி விட்டேனே… விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்’ எனக் கூறி பேட்டியை முடித்து கொண்டார்.
Leave a Reply