கோவை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற காரணமாக இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி லேசில் தப்பிக்க முடியாது. கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சில பள்ளி ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு குறைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளியை நம்பி வரும் ஏழை மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி முதலே உள்ள இந்த பிரச்னையால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்கள் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். தேர்வில் போதுமான மதிப்பெண் பெற முடியாமல் பெயிலாகும் பரிதாப நிலைமை ஏற்படுகிறது.
இந்த நிலைமையை மாற்றி, ஆசிரியர்களை மாணவர் தேர்ச்சியில் கவனம் செலுத்த தூண்ட, இந்த கல்வியாண்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சில அதிரடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிக சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு, குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் குறைந்த சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் பணிபுரிந்த சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பொதுத் தேர்வுகளிலும், கடந்த ஆண்டு 60 சதவீதத்துக்கு கீழ் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. சரியான விளக்கம் அளிக்காத ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி கல்வியாளர் ஒருவர் கூறுகையில், “”மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உதவும் பள்ளிக்கல்வித் துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, இந்தாண்டு நிச்சயம் பலன் இருக்கும். தேர்ச்சி சதவீதம் குறைந்தால், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்கும் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த பயம் காரணமாக, இந்த ஆண்டு நிச்சயம் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்,” என்றார்.
Leave a Reply