அரிசி விலை மேலும் உயரும் அபாயம் : லெவி அமலுக்கு வருவதாக வியாபாரிகள் பேச்சு

posted in: மற்றவை | 0

2916638தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் நெல்லுக்கு, விரைவில், ‘லெவி’ அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக, அரிசி விலை மேலும் <உயரும் அபாயம் உள்ளது. தமிழகத்துக்கு அதிகளவில் நெல் வழங்கிய கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், லெவி அமல் செய்துள்ளதால், ஓர் ஆண்டாக, அரிசி விலையில் வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு, அரிசி ஆலைகளுக்கு மின் தடையில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. எனினும், அரிசி விலை குறைந்த பாடில்லை.

தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடை துவங்கும் பட்சத்தில், அரிசி விலையில் சரிவு ஏற்படுவது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு, மேட்டூர் அணை நீர் திறப்பில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, ஜனவரி இரண்டாவது வாரத்தில் தான் நெல் அறுவடை துவங்கும் என தெரிகிறது.

தற்போது துவங்கியுள்ள வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால், நெல் பயிர், அறுவடை பாதிப்புக்கு <உள்ளாகாமல் இருந்தால் மட்டுமே, நெல் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இருக்கும். கடந்த மாதம் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த தொடர் மழையால், நெல் விளைச்சல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும், அம்மாநிலங்களில் நெல் ஏற்றுமதிக்கு, 'லெவி' அமலில் உள்ளது. அதனால், 'அம்மாநிலங்களுக்கு, தமிழகத்தில் இருந்து நெல் விற்பனைக்கு செல்லும் பட்சத்தில், தமிழகத்தில் நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும், அரிசி விலை மீண்டும் உயர்வை சந்திக்கும்' என, நெல் அரிசி வணிகர்கள், வியாபாரிகள் தரப்பில் அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அக்., 30ல் தமிழக உணவுத்துறை அமைச்சர், நெல் அரிசி உற்பத்தியாளர், வியாபாரிகளுடன், நெல் ஏற்றுமதிக்கு, 'லெவி' அமல் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இன்னும் சில தினங்களில், தமிழகத்தில் நெல் ஏற்றுமதிக்கு லெவி அமல் செய்யப்படும் என அரசு அறிவிக்கும் என்ற செய்தி, வியாபாரிகள் மத்தியில் பரவியதையடுத்து, தற்போது, அரிசி விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில், அரிசி நிலவரம், வெள்ளை பொன்னி பச்சை அரிசி கிலோ 41 ரூபாய்க்கு விற்றது 44 ரூபாய்க்கும், பி.பி.டி., பொன்னி பச்சை அரிசி 35லிருந்து 38 ரூபாய்க்கும் விற்கிறது. அதேபோல், பிற ரக பச்சை அரிசியின் விலையும், கிலோவுக்கு இரண்டு முதல் நான்கு ரூபாய் வரை அதிகரித்துள்ளது. புழுங்கல் அரிசியில் உயர்ரக வெள்ளை பொன்னி கிலோ 39 ரூபாய்க்கு விற்றது நேற்று 40 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 38லிருந்து 39 ரூபாய்க்கும், உயர்தர கர்நாடகா டீலக்ஸ் பொன்னி 32லிருந்து 34 ரூபாய்க்கும் விற்கிறது. பி.பி.டி., (பாபத்லால் பொன்னி) முதல் ரகம் கிலோ 35 ரூபாய்க்கு விற்றது 36 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 31 ரூபாய்க்கு விற்றது 32 ரூபாய்க்கும், டீலக்ஸ் பொன்னி கிலோ 27 ரூபாய்க்கு விற்றது 29 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 24 ரூபாய்க்கு விற்றது 26 ரூபாய்க்கும் விற்கிறது. கிராந்தி ரக இட்லி அரிசி கிலோ 22 ரூபாய்க்கு விற்றது 24 ரூபாய்க்கும், ஏ.டி.டி., 37 ரகம் கிலோ 18 ரூபாய்க்கு விற்றது 20 ரூபாய்க்கும், அம்பை 16 கிலோ 20 ரூபாய்க்கு விற்றது 21 ரூபாய்க்கும், ஏ.டி.டி., 36 கிலோ 20 ரூபாய்க்கு விற்றது 21 ரூபாய்க்கும் ஏ.டி.டி.,43 டீலக்ஸ் ரகம் 20 ரூபாய்க்கு விற்றது 22 ரூபாய்க்கும் விற்கிறது. சேலம் செவ்வாய்ப் பேட்டையை சேர்ந்த அரிசி வியாபாரி சின்னதுரை கூறியதாவது: தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் புதிய ரக நெல் வரத்து காரணமாக, அரிசி விலையில் குறைவு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு, புதிய ரக நெல் வரத்து இன்னும் துவங்க வில்லை. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த தொடர் மழை மற்றும் 'லெவி' அமலில் உள்ளதால், அங்கிருந்து தமிழகத்துக்கான அரிசி வரத்து முற்றிலும் தடை பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்திலும் எதிர்பார்த்த அளவு நெல் விளையுமா என்பது மழை பெய்வதைப் பொறுத்தே உள்ளது. இதனால், தமிழகத்தில் விளையும் நெல்லை, வெளி மாநிலங்களுக்கு செல்லாமல், தமிழகத்திலேயே பயன்படுத்தும் வகையில், தமிழக அரசு, 'லெவி' அமல் குறித்து வியாபாரிகள், அரிசி உற்பத்தியாளரிடம் பேச்சு நடத்தி உள்ளது. இன்னும் சில தினங்களில், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கான நெல் ஏற்று மதிக்கு 'லெவி' அமல் படுத்தப்படும் என, தெரிகிறது. அதன் எதிரொலி, நிச்சயம் அரிசி விலையில் இருக்கும். இவ்வாறு சின்னதுரை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *