ஆப்கன் வந்தார் பான் – கி – மூன் : மீண்டும் கர்சாய் அதிபரானார்

posted in: உலகம் | 0

tblworldnews_78043329716காபூல் : ஆப்கானிஸ்தானில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலை பார்வையிடுவதற்காக, ஐ.நா.,பொது செயலர் பான் -கி -மூன் நேற்று காபூல் வந்தார் . ஆனால், மீண்டும் கர்சாய் அதிபர் என்று திடீர் திருப்பமாக அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் கர்சாயும், அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாவும் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலுடன் 34 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது.

ஆனால், இந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக அப்துல்லா கூறினார். பல இடங்களில் வன்முறை நடந்ததால், “தேர்தல் நடந்த முறை சரியில்லை’ என, சர்வதேச பார்வையாளர்களும் அதிருப்தி தெரிவித்தனர். பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்ததால், மறு தேர்தல் நடத்த கர்சாய் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, வரும் 7ம் தேதி மறுதேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிபர் கர்சாய் போட்டியிடுகிறார். ஆனால், இவரை எதிர்த்து போட்டியிடப் போவதில்லை என, அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று திடீரென அதிபர் கர்சாய்தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இனி ஆப்கானில் அதிக செல்வாக்கு இல்லாத அதிபராக அவர் இருக்க நேரிடும். அதிபர் கர்சாயை எதிர்த்துப் போட்டியிட இருந்த ஒரே வேட்பாளரும் விலகிக் கொண்டதால், ஆப்கனில் தேர்தல் நியாயப்படி நடக்க வில்லை என்பதுடன், அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளியாக மீண்டும் கர்சாய் தேர்வும் அமைந்து விட்டது.

தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக, ஐ.நா.,பொதுச் செயலர் நேற்று திடீர் பயணமாக காபூல் சென்றார். அங்கு பணியில் உள்ள ஐ.நா.,அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். இந்த தேர்தலுக்கு பின், அமெரிக்கா கூடுதலாக 40 ஆயிரம் படை வீரர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி பாதுகாப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதிபராக கர்சாய் தேர்வு தேர்தல் கமிஷன் அறிவிப்பு

ஆப்கனில் நடந்த தேர்தலில் அதிபர் கர்சாய் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. ஆப்கனில் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் கர்சாயும், அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக அப்துல்லா புகார் தெரிவித்தார். வரும் 7ம் தேதி மறுதேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், “அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை’ என, அப்துல்லா தெரிவித்ததையடுத்து, அங்கு நடைபெறவிருந்த அதிபர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே நடந்த அதிபர் தேர்தலில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஓட்டு எண்ணிக்கையில் கர்சாய் முன்னணியில் இருந்ததால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆப்கன் தலைமைத் தேர்தல் கமிஷனர் அஜிஸ்லுல்லா லுதின் இதை அறிவித்தார்.

ஆப்கன் அதிபராக அமித் கர்சாய் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *