வாஷிங்டன்:அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூட்டறிக்கைக்கு இந்திய தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்திய அரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்நாட்டின் அதிபர் ஹூ ஜிண்டாவோவை சந்தித்துப் பேசினார்.
பின்னர், இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மேம்பட உதவுவதற்கு தங்கள் நாடுகள் தயாராக இருக்கின்றன’ என தெரிவித்தனர். இந்த அறிக்கையால் எரிச்சல் அடைந்த மத்திய அரசு, “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கே இடமில்லை’ என தெரிவித்தது.இந்தக் கண்டனத்தை அடுத்து, இந்தியாவை சமாதானப் படுத்தும் முயற்சியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், இது தொடர்பாக கூறியதாவது:இந்தியா – பாகிஸ்தான் உறவுகளைப் பொறுத்தமட்டில், எப்படி, எப்பொழுது பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதை அந்த இரு நாடுகளும் தான் முடிவு செய்ய வேண்டும். சீனாவைப் போலவே இந்தியாவுடனும் சம முக்கியத்துவம் வாய்ந்த உறவை அமெரிக்கா கொண்டுள்ளது.
அதனால், சீனாவில் அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கை பற்றி இந்திய அரசு கவலைப் படத் தேவையில்லை.இந்தியாவுடன் எந்த அளவுக்கு நல்ல உறவு வைத்துள்ளோம் என்பது பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த வாரம் அமெரிக்கா வரும் போது தெரியும். இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டுமென, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்தியா – பாக்., உறவுகள் மேம்பட வேண்டுமெனில், இப்போது பாகிஸ்தான் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மும்பை தாக்குதலில் தொடர்புள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் நிகழாமல் தடுக்க வேண்டும். இந்தியா மீதும், மற்ற அண்டை நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் மண்ணில் செயல்படாமல் அந்நாடு பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு ராபர்ட் பிளேக் கூறினார்.
Leave a Reply