ராமநாதபுரம்: இலங்கைக் கடற்படையில் சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து கவலைபபடுவதாக தெரியவில்லை. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தமிழக மீனவர்களை இந்தியர்களாகவே இலங்கைக் கடற்படையினர் நினைப்பதில்லை. அவர்களை தமிழர்களாக மட்டுமே பார்த்து தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்திய அரசும் கூட இதுகுறித்து இதுவரை உறுதியான, இறுதியான நடவடிக்கை எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஆனால் தற்போது புதிய பிரச்சினை ஒன்று எழுந்துள்ளது. அது இலங்கைக் கடற்படையினருடன், சீனர்களும் இணைந்து தங்களைத் தாக்குவதாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் தகவல்கள்தான்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து வரக் காத்திருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வரும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கைக் கடற்படையினருடன் சீனர்களைப் போன்ற தோற்றமுடைய பலரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வேறு பாஷையில் பேசுகிறார்கள்.
விடுதலைப் புலிகள் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாப் பகுதிகள் அதிக பதட்டம் உடைய பகுதிகளாக மாறி விட்டன.
விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாக இலங்கைதான் கூறியது. தற்போது புலிகள் ஊடுறுவி விடாமல் தடுக்கிறோம் என்ற போர்வையில் இப்பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கண்காணி்ப்பு என்ற போர்வையில் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர்.
தங்களிடம் பிடிபடும் இந்திய மீனவர்களை மிகக் கொடூரமாக தாக்குகின்றனர். முன்பு கடற்புலிகள் இருந்தார்கள். அவர்களை வேட்டையாடுவதாக கூறி தமிழக மீனவர்களைத் தாக்கினர். ஆனால் தற்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் எந்தவித நியாயமும் இல்லை.
சமீப காலமாக இலங்கைக் கடற்படையினருடன் சீனர்களும் காணப்படுகின்றனர். இதனால் எங்களுக்கு மட்டுமல்லாமலநமது நாட்டுக்கே பெரும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எழுகிறது என்கின்றனர்.
ராமேஸ்வரம் நரிபையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் கூறுகையில், இலங்கைப் படையினருடன் பல்வேறு புதிய முகங்களும் காணப்படுகின்றன. இவர்கள் நிச்சயம் இலங்கையர்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிகிறது என்றார்.
பாம்பனைச் சேர்ந்த லிடன் கூறுகையில், சீனப் படையினர் சமீப காலமாக இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து வருவதைக் காண முடிகிறது. இலங்கைக் கடற்படையினரின் சீருடையில் அவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பிடிபடும் இந்திய மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினரை விட இவர்கள்தான் மூர்க்கமாக நடந்து கொள்கின்றனர் என்றார்.
தமிழ்நாடு மீனவர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் என்.ஜே.போஸும் சீனப்படையினர் இருப்பதை உறுதி செய்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்பு இலங்கைப் படையினர் மட்டும்தான் தாக்கினர். தற்போது சீனர்களும் சேர்ந்து இந்திய மீனவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளனர் என்றார்.
மீனவர்கள் சொல்வதை வழக்கம் போல இந்திய அரசு அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே சொல்லத் தோன்றுகிறது. காரணம், இலங்கைக் கடற்படையினருடன் சீனர்கள் இணைந்து தாக்கத் தொடங்கியிருப்பது நிச்சயம் நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. இதுகுறித்து பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை யில் இறங்கினால்தான் நல்லது. இல்லாவிட்டால் காத்திருக்கும் பேராபத்தை நாமே விலை கொடுத்து வாங்கியது போலாகி விடும்.
Leave a Reply