உலகின் பலம் வாய்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றிகொள்ள இராணுவத்தினரால் மட்டும் ஒரு போதும் முடியாது: ஊடகத்துறை அமைச்சர்

posted in: உலகம் | 0

anura_priyadarshana_yapa4ssஉலகில் மிகவும் சக்திபடைத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெற்றி கொள்ள இராணுவத்தினரால் மட்டும் முடியாது. அதற்குச் சிறந்த அரசியல் தலைமைத்துவமே தேவை. அந்தத்தேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அரச தகவல் ஊடகத்துறை அமைச்சில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவி ஏற்றது முதல் இதுவரையிலான இந்தக் குறுகிய காலகட்டத்தில் பாரிய அளவிலான ஒரு சேவையை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் ஆற்றியுள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்ட போதிலும் அவற்றுக்கு அஞ்சாமல் ஒரு தேசியத் தலைவராகச் சுயாதீனத்துடன் செயல் பட்டு உலகில் மிகவும் சக்தி படைத்த புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டுக்கு முடிவு கட்டினார்.

இவ்வாறான ஒரு இயக்கத்தை வெற்றி கொள்வதற்கு இராணுவத்தினால் மட்டும் முடியாது. அதற்குச் சிறந்த அரசியல் தலைமைத்துவமும் தேவைப்படுகின்றது.

அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வடமராட்சி சம்பவத்தைக் கூறலாம்.

அந்தக் காலகட்டத்தில் மறைந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதியாகவும் லலித் அத்துலத் முதலி பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர்.

இராணுவம் வடமராட்சியில் கடும் மோதலில் ஈடுபட்டு வெற்றியை அண்மித்துக் கொண்டிருந்த வேளையில் சர்வதேச அழுத்தங்களுக்கு ஏற்ப அரசு படையினரை வாபஸ் பெற்றது.

இந்தப் போராட்டத்தின் போதும் இவ்வாறான அழுத்தங்கள் இல்லாமல் இல்லை. அவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் முடிவுகளை எடுத்து போராட்டத்தை வெற்றி கொண்டு நாட்டுக்குச் சுதந்திரத்தை ஜனாதிபதி பெற்றுத்தந்தார்.

அவருடைய நான்கு வருட பதவிக் காலத்தில் நாட்டில் பல துறைகளிலும் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளார். சமாதானத்தை நிலைநாட்டியுள்ளார் என்றார்.
முகப்பு Print Send

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *