புதுடில்லி:”ஜெய்ப்பூர் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 191 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது’ என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய பெட்ரோலிய இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, லோக்சபாவில் நேற்று எழுத்து மூலமாக அளித்த பதில்:ஜெய்ப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்கில் கடந்த மாதம் 29ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருட்கள் நாசமாயின. 11 பேர் இறந்தனர்; ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், 28 பேர் சிறிய அளவில் காயமடைந்தனர். எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், 191 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.தீயில்எரிந்து சாம்பலான இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் வாங்கவும், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் 160 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் பலியானோருக்கும், காயமடைந்தவருக்கும் இழப்பீடு அளிக்கப் பட்டுள்ளது. விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 60 நாட்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்வர். இந்த விபத்தின் எதிரொலியாக, போதிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறினார்.
Leave a Reply