மாஸ்கோ: இன்று உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராளிகள் கையில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இதைக் கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகயீல் கலஷ்னிகோவுக்கு 90 வயது பிறந்துள்ளது. இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விருதளித்துக் கெளரவித்தார்.
உலகில் இன்று மிகப் பிரபலமாக இருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இன்றளவும் நவீனமானதாக இது இருந்தாலும், 1947ம் ஆண்டே இது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்தவர்தான் கலஷ்னிகோவ். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏ.கே. 47 மற்றும் அதன் பல்வேறு வகை துப்பாக்கிகள் முக்கிய ஆயுதமாக புழக்கத்தில் உள்ளன.
தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் கைகளிலும் இந்த துப்பாக்கிதான் பிரதான ஆயுதமாக நடமாடி வருகிறது.
இந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலஷ்னிகோவுக்கு 90 வயதாகியுள்ளது. இதையொட்டி மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் அவரைக் கெளரவப்படுத்தும் வகையில் அதிபர் மெத்வதே விருதளித்தார்.
கிரம்ளின் மாளிகையில் நடந்த இந்த விழாவில் கலஷ்னிகோவின் பணி பாராட்டப்பட்டது. அவருக்கு அதிபர் அளித்த விருதின் பெயர் ரஷ்ய கூட்டமைப்பின் மாவீரன் என்பதாகும்.
நிகழ்ச்சியில் மெத்வதேவ் பேசுகையில், நீங்கள் கண்டுபிடித்தது ஒரு சாதாரண துப்பாக்கி மட்டுமல்ல, ஒவ்வொரு ரஷ்யனுக்கும், ரஷ்ய நாட்டுக்கும் பெருமை சேர்க்கக் கூடிய ஆயுதத்தைக் கண்டுபிடித்துள்ளீர்கள். ஏ.கே.47 துப்பாக்கி ரஷ்யாவின் பிராண்ட் ஆக மாறியுள்ளது என்றார்.
கலஷ்னிகோவ் ஏற்கனவே சோவியத் யூனியன் உயிருடன் இருந்தபோது, இரு முறை சோஷலிச தொழிலாளர்களின் மாவீரன் என்ற விருதைப் பெற்றுள்ளார். பின்னர் 1998ம் ஆண்டு செயின்ட் ஆண்ட்ரூ விருதினைப் பெற்றார்.
ஏகே.47 கதை…
ஏ.கே. 47 என்பதன் விரிவாக்கம் அவ்தோமத் கலஷ்னிகோவா 47 என்பதாகும். 1947ல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு 47 என்று பெயரிடப்பட்டது.
ரஷ்ய ராணுவத்தில் இருந்தவரான கலஷ்னிகோவ், 2ம் உலகப் போரின்போது குண்டுக் காயமடைந்து மருத்துவமனையில் படுத்திருந்தார். அப்போதுதான் அவரது மனதில் இந்தத் துப்பாக்கி குறித்த சிந்தனை தோன்றியது.
அப்போது ஜெர்மனி வீரர்கள் தானியங்கித் துப்பாக்கிகளுடன் இருந்தனர். ஆனால் ரஷ்ய வீரர்களிடமோ சாதாரண துப்பாக்கிதான் இருந்தது. இதுதான் கலஷ்னிகோவை அதி நவீன தானியங்கித் துப்பாக்கியான ஏ.கே. 47ஐ கண்டுபிடிக்க உத்வேகமாக அமைந்தது.
இந்தத் துப்பாக்கி ரஷ்யப் படையினருக்கு பெரும் முன்னேற்றத்தைக் கொடுத்தது. ஆனால் பின்னர் இது உலகெங்கும் பிரபலமாகி விட்டது. இன்று கிட்டத்தட்ட 100 மில்லியன் ஏ.கே. 47 மற்றும் அதன் மேம்படுத்தப்பட்ட வகை துப்பாக்கிகள் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தத் துப்பாக்கியை காப்பி அடித்துதான் சீனாவில் 56 ரக துப்பாக்கியை உருவாக்கினர். இருப்பினும் ஏ.கே. 47 துப்பாக்கியை அடித்துக் கொள்ள இன்று வரை அதற்கு நிகரான துப்பாக்கி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
1997ம் ஆண்டு முதல் இந்த வகை துப்பாக்கியை ரஷ்யாவைச் சேர்ந்த இஸ்மாஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. அதற்கான காப்புரிமையையும் அது பெற்றுள்ளது. அன்று முதல் இந்த நிறுவனம் மட்டுமே உலகம் முழுவதும் ஏ.கே. 47 துப்பாக்கியைத் தயாரித்துத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002ம் ஆண்டு ஜெர்மனிக்கு சென்றிருந்த கலஷ்னிகோவ் தனது கண்டுபிடிப்பு குறித்துக் கூறுகையில், எனது கண்டுபிடிப்புக்காக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இன்று இந்தத் துப்பாக்கி தீவிரவாதிகளின் கைகளில் தவழ்வதுதான் எனக்கு வேதனையாக உள்ளது.
இதை நினைக்கும்போது இந்தத் துப்பாக்கிக்குப் பதில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலான இயந்திரத்தைக் கண்டுபிடித்திருக்கலாமோ என்று நினைக்கிறேன் என்று வருத்தப்பட்டுக் கூறினார்.
அவரது வருத்தத்திலும் நியாயம் உள்ளது. காரணம், இன்று ஏகே.47 துப்பாக்கிகள், பாதுகாப்பு படையினரை விட தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் கையில்தான் அதிகம் உள்ளது.
தொடர்ந்து கலஷ்னிகோவ் கூறுகையில், தாயகத்தின் எல்லைகளைக் காக்கும் வீரர்களுக்கு உதவுவதற்காகவே இந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தேன். ஆனால் இன்று அது வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது எனது தவறல்ல. இது அரசியல்வாதிகளின் தவறு. அதனால்தான் இன்று கை மாறிப் போய் விட்டது எனது கண்டுபிடிப்பு என்றார்.
அதி பயங்கர ஆயுதத்தைக் கண்டுபிடித்தவரான கலஷ்னிகோவ், ஆரம்பத்தில் கவிஞராக வர வேண்டும் என விரும்பியவராம். ஆரம்ப காலத்தில் ஆறு கவிதைப் படைப்புகளையும் கூட அவர் உருவாக்கினாராம். நான் பெரிய கவிஞராக வருவேன் என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் நான் ராணுவ வீரனாகி விட்டேன். மிகப் பெரிய துப்பாக்கியின் தந்தையாகவும் மாறிப் போய் விட்டேன் என்கிறார் கலஷ்னிகோவ்.
Leave a Reply