புவனேஸ்வர்: ஒரி்ஸ்ஸா மாநிலம் சண்டிபூரில் வீலர்ஸ் தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ராணுவ வீரர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏவுகணைகளி்ல் பொறுத்த வேணடிய வெடிகுண்டுகளை வாகனங்களில் ஏற்றியபோது அவை வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நடந்துள்ளது.
நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் ஏ.கே.சுக்லா என்ற ராணுவ வீரர் பலியானார். மேலும் தேபதத்தா வாஜ்பாய் ( 35), அலோக் குமார் (26), வெங்கடேஷ்வர் (34) ஆகிய ராணுவ வீரர்கள் படுகாயமடந்துள்ளதாக ராணுவத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவான டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
புவனேஸ்வரத்தில் இருந்து 230 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடலில் உள்ளது சண்டிபூர். இதன் அருகே உள்ளது தான் வீலர்ஸ் தீவு. இங்கு தான் இந்தியாவின் அனைத்து ஏவுகணைகளும் சோதனையிடப்படுகின்றன.
அக்னி-II சோதனை ஒத்திவைப்பு:
இந் நிலையில் இந்த வார இறுதியில் சோதனையிடப்படவிருந்த அக்னி-2 ஏவுகணையின் சோதனை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
அணு ஆயுதங்களை ஏந்தி 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அதன் திறனை மேம்படுத்த தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அங்கு நடந்த விபத்து க்கும் ஏவுகணை சோதனை ஒத்தி வைப்புக்கும் தொடர்பில்லை என்றும், ஏவுகணையின் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளதால் தான் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு்ள்ளதாகவும் தெரிகிறது.
Leave a Reply