ஆமதாபாத்: அமெரிக்காவின் பிரபல பொழுதுபோக்கு நிறுவனம், வால்ட் டிஸ்னி முதன் முறையாக ஐ.ஐ.எம்.,மில் ஆட்களை தேர்வு செய்கிறது.
மிக்கிமவுஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் குழந்தைகள் மட்டுமின்றி, அனைவரையும் கவர்ந்திழுத்த வால்ட் டிஸ்னி நிறுவனம், இப்போது பொழுதுபோக்குப் படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி, மிக்கிமவுஸ் மூலம் தனது வியாபார தளத்தை விரிவாக்கியும் வருகிறது.பூங்காக்கள் அமைப்பது, உணவுப் பொருட்கள் தயாரிப்பது போன்ற பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்து வருகிறது.உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங் களில் ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மும் ஒன்று.
இதுபோன்ற மேலாண்மைக் கல்லூரிகளில் வெளிநாட்டு பிரபல நிறுவனங்கள், “கேம்பஸ் இன்டர்வியூ&’ என்ற பெயரில் தங்களது நிர்வாகத்துக்கு ஆட்கள் எடுப்பது வழக்கம்.இதற்காக இத்தகைய கல்லூரிகளில், பிளேஸ்மென்ட் செல் என்று தனியாக ஒரு அமைப்பு இயங்கும். பொருளாதார மந்தத்தினால் இந்த கேம்பஸ் இன்டர்வியூ நடப்பது கொஞ்சகாலமாக குறைந்திருந்தது.
இப்போது மீண்டும் ஆளெடுப்பு நடக்கத் துவங்கியுள்ளது.வால்ட் டிஸ்னி முதன் முறையாக ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் தனது நிர்வாகத்துக்கு ஆள் எடுக்கும் பணியைத் துவங்கியுள்ளது. அனேக மாக அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சுக்குள் இந்தப் பணியை முடித்துவிடும் என்று தெரிகிறது.
வால்ட் டிஸ்னி மட்டுமல்லாமல், ஸ்டார்கம் மீடியா வெஸ்ட், எச்.டி., மீடியா, ஸ்டார் டிவி, டாபர், ஏசியன் பெயின்ட்ஸ், ரினால்ட் போன்ற நிறுவனங்களும் இப்போது ஆள் எடுத்துக் கொண்டிருக்கின்றன.
ரியல் எஸ்டேட் துறையில் பிரபலமான, ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ராம்கி இன்ப்ராஸ்டரக்ச்சர் நிறுவனங்களும் முதன் முறையாக கேம்பஸ் இன்டர்வியூவில் பங்கு பெறுகின்றன.கடந்த ஆண்டு முதன்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ.ஐ.எம்.,மில் ஆள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply