பெங்களூரு : கர்நாடகாவில் மீண்டும் ஒரு திருப்புமுனையாக, ரெட்டி சகோதரர்களால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்த பெண் அமைச்சர் ஷோபா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல்வர் எடியூரப்பா உடனடியாக ஏற்று, கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.
கர்நாடகா, பெல்லாரியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி ஆகியோர், முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கடந்த வாரம் திடீரென போர்க்கொடி தூக்கினர். எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கும் வரை ஓயப் போவதில்லை என தொடர்ந்து முழங்கி வந்தனர். மேலும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ஷோபா, மற்ற அமைச்சர்களின் இலாகாக்களில் தலையிடுவதாகக் கூறி, அவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென ஆவேசமாகக் கூறினர். இந்தச் சூழலில், நேற்று முன்தினம் பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் வீட்டில் நடந்த பேச்சுக்குப் பின், எடியூரப்பா மற்றும் ரெட்டி சகோதரர்களிடையே சமரசம் ஏற் பட்டது. இதையடுத்து, கட்சி மற்றும் கர்நாடக மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு எடியூரப்பாவுடன் இணைந்து பணியாற்றுவதாக ரெட்டி சகோதரர்கள் அறிவித்தனர். இது குறித்து பின்னர் கருத்து தெரிவித்த எடியூரப்பா, “எந்த அமைச்சரையும் நீக்கும் எண்ணம் தனக்கு இல்லை’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஷோபா, நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவிடம் அளித்தார். ராஜினாமாவை உடனடியாக ஏற்ற எடியூரப்பா, அந்தக் கடிதத்தை மாநில கவர்னருக்கு அனுப்பினார். கர்நாடகாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜ., சார்பில் யஷ்வந்த்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஷோபா, எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றார்; 45 வயதாகும் ஷோபா, அம்மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சர். முதல்வர் எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
சபாநாயகருடன் சந்திப்பு: இதற்கிடையே முதல்வர் எடியூரப்பா, நேற்று சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டாரை சந்தித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தில் நடந்த குழப்பங்கள் மற்றும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடந்த அமைதி பேச்சு தொடர்பாக அவரிடம் விவரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பு வழக்கமானது தான் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே நேற்று முதல்வர் எடியூரப்பா, நிருபர்களிடம் கூறியதாவது: இனி நீங்கள் வித்தியாசமான எடியூரப்பாவை பார்ப்பீர்கள். பிரச்னை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. முதல்வர் என்பவர் மன்னிக்கும் மனப்போக்கு கொண் டிருக்க வேண்டும். இனிமேல் இம்மாதிரி சம்பவங்கள் நடக்க அனுமதிக்க மாட்டேன். அரசு செயல்பாட்டிற்காக அமைக்கப்படும் விசேஷ கமிட்டியின் முன், பிரச்னைகள் பேசித் தீர்க்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Leave a Reply