புதுடில்லி : அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள சில மாநிலங்களுக்கு விஜயம் செய்ததாக வெளியான தகவல்களை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: லஷ்கர் -இ- தொய்பா அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய டேவிட் ஹெட்லி என்பவனை, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன (எப்.பி.ஐ., ) அதிகாரிகள் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு விஜயம் செய்தது தெரியவந்துள்ளது. அணுமின் நிலையங்கள் உள்ள குஜராத், உ.பி., மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சென்றுள்ளான். அதனால், அங்குள்ள அணுமின் நிலையங்களுக்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. பயங்கரவாதிகளின் தாக்குதல் சதியில், அணுமின் நிலையங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே. பயங்கரவாதிகள் தங்களின் சதி வேலைகளை அரங்கேற்றி விடாமல் தடுக்கவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசத்தில் நரோரா, கர்நாடகாவில் கைகா, மகாராஷ்டிராவில் தாராப்பூர், தமிழகத்தில் கல்பாக்கம், குஜராத்தில் காக்ராபூர், ராஜஸ்தானில் கோடா என, நாட்டில் ஆறு இடங்களில் பெரிய அணுமின் நிலையங்கள் உள்ளன. இதுதவிர பல இடங்களில் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. அமெரிக்காவில் சமீபத்தில் கைதான பயங்கரவாதிகள் டேவிட் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோர் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், பாகிஸ்தானில்தான் இருந்துள்ளனர். இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
Leave a Reply