காஷ்மீர் பேச்சுவார்த்தை-சீனாவையும் இழுக்க முயலும் ஹுரியத்

posted in: மற்றவை | 0

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவரான மீர்வைஸ் உமர் பாரூக் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரின் மிதவாத பிரிவினைவாத அமைப்பாக கருதப்பட்டு வரும் வேளையில் மீர்வைஸ் வைத்துள்ள இந்தக் கோரிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 28ம் தேதி சீனா செல்லவிருக்கிறார் மீர்வைஸ். இந் நிலையில் இப்படி ஒரு கோரிக்கையை அவர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகர் ஜாமியா மசூதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், காஷ்மீர் பிரச்சனையில் சீனாவுக்கும் பங்குண்டு. எனவே அந்த நாட்டையும் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் சேர்க்க வேண்டும். இதை நான் சீன அரசிடமும் வலியுறுத்தவுள்ளேன்.

காஷ்மீர் பிரச்சனை தற்போது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது. சீனா இந்தப் பிராந்தியத்தில் வல்லரசாக திகழ்கிறது. உலக அளவிலும் அது வல்லரசாக மாறி வருகிறது. மேலும், அந்த நாட்டுக்கும், காஷ்மீர் பிரச்சனையில் பங்குண்டு. எனவே நேரடித் தொடர்புடைய அந்த நாட்டையும் இந்தப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சேர்க்க வேண்டும் என்றார்.

அவரது கருத்து காஷ்மீர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத போக்குடைய தலைவர்களான சபீர் ஷா, யாசின் மாலிக் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

இருப்பினும் ஹுரியத்தின் இன்னொரு பிரிவின் தலைவரான சையத் அலி கீலானி கூறுகையில், 1947க்கு முன்பு இருந்த காஷ்மீர் அமைப்பின் மீது எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது. எனவே இறுதி உடன்பாடு ஏற்படும்போது சீனாவும் எங்களது கருத்தை கேட்க வேண்டும் என கருதுகிறோம் என்றார்.

இந்த விவகாரம் குறித்து முக்கிய எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி, சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதி, சுய ஆட்சி பிரகடனத்தின் கீழ் வருகிறது. இந்த விவகாரத்தில் காஷ்மீர் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

காரகோரம் பகுதியில், கிட்டத்தட்ட 5180 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும், அக்சய் சீன் என்ற பெயரில் 3800 சதுர கிலோமீட்டர் பரப்பளையும் காஷ்மீரில் ஆக்கிரமித்து வைத்துள்ளது சீனா. இதில் காரகோரம் பகுதியில் உள்ள காஷ்மீர் பகுதியை, பாகிஸ்தான், சீனாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.

அக்சய் சீன் பகுதிதான் இந்திய, சீன எல்லைப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக விளங்கி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *