பெங்களூர் கர்நாடக அரசியலில் அடுத்த கட்ட திருப்பமாக, முதல்வர் எடியூரப்பாவும் எதிர்கோஷ்டியான ரெட்டி சகோதரர்களும் டெல்லியில் இன்று நேருக்குநேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ஜப்பானில் இருந்து கர்நாடகா வந்துள்ள முதலீட்டாளர்கள், முதல்வர் எடியூரப்பாவை பெங்களூரில் உள்ள அவருடைய அதிகாரப்பூர்வ அரசு இல்லமான கிருஷ்ணாவில் நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர், எடியூரப்பா அளித்த பேட்டி: கர்நாடக பா.ஜ.வில் ஏற்பட்டுள்ள பூசல் பற்றி பேசுவதற்காக கட்சி விடுத்த அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறேன். அங்கு பா.ஜ. மேலிடத் தலைவர் சுஷ்மா சுவராஜுடன் நாளை ஆலோசனை நடத்துகிறேன். அப்போது, கருணாக ரெட்டியையும் ஜனார்த்தன ரெட்டியையும் நான் சந்திக்கும் வாய்ப்புள்ளது. 18 மாதமாக கர்நாடக பா.ஜ. ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும்படி சுஷ்மா சுவராஜ் அறிவுரை கூறியுள்ளார்.
முதல் கட்டமாக, ரெட்டி சகோதரர்களுடனும் அதன் பிறகு அவர்களின் ஆதரவாளரான சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமலுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புள்ளது. அதேபோல், அத்வானி, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி போன்றவர்களையும் சந்தித்து கர்நாடகா நிலவரத்தை விளக்க உள்ளேன். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வதில் நடந்த சில தவறுகள் பிரச்னைகளாக வெடித்துள்ளன. எனவே, அது குறித்து உரிய விளக்கமளித்து, பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளை தீர்க்க முயலுவேன். டெல்லி பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும் என்ற நம்புகிறேன். பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடக்கவுள்ள சந்திப்பில், கர்நாடகா வெள்ளச் சேதத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும்படி வேண்டிக் கொள்வதோடு, வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரும் திட்டத்துக்கான தொடக்க விழாவில் கலந்து கொள்ளும்படி பிரதமரை அழைக்க உள்ளேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Leave a Reply