புதுடில்லி:சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலமான சந்திரயான்1 அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் நீண்ட கால பயணம் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியதாவது: சந்திரனுக்கு, ஆளில்லாத விண்கலமான சந்திரயான்1யை நாம் அனுப்பி வைத்தோம்.
விரைவில், சந்திரனுக்கு விண்கலத்தில் மனிதர்களை அனுப்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது.எதிர்காலம், புதிய கண்டுபிடிப்புகள், புதிய கருத்துக்கள் மற்றும் புது முயற்சிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த திசையிலேயே பயணிக்கவும், இந்தியாவை அறிவும், நிபுணத்துவமும் நிறைந்த நாடாக உருவாக்கவும் நாம் தயாராக வேண்டும். பொருளாதார சீர்த்திருத்தங்கள், நாட்டின் பொருளாதாரத்தை உலகுடன் ஒருங்கிணைத்துள்ளது. பல வெளிநாட்டு கம்பெனிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு, சாதகமான இடமாக இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது.உலகின் மற்ற நாடுகளுடன், நமது பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில்(ஆசியான்) இடம்பெற்றுள்ள 10 நாடுகள் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுடன், இந்தியா சமீபத்தில் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டது.நம் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தினால், அடுத்த ஐந்தாண்டுகளில், 27.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு பிரதிபா கூறினார்.
Leave a Reply