சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து புதுச்சேரி அரசு அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை

posted in: மற்றவை | 0

06_001ஊழல் வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு பயந்து புதுச்சேரியில் அரசு அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுச்சேரி உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 39). புதுச்சேரி காவல்துறை தலைமையக அலுவலகத்தில் பட்ஜெட் மற்றும் ஹவுசிங் செக்ஷன் அதிகாரியாக பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசாருக்கு ஹெல்மட் வாங்கியதாக போலி பில் தயாரித்து ஊழல் நடந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் அதிரடியாக காவல்துறை தலைமையகத்தில் விசாரணை நடத்தினர். இதன் எதிரொலியாக காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் அப்துல்ரகீம், சப்-இன்ஸ்பெக்டர் டோமினிக் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அலுவலக அதிகாரியான புஷ்பாராஜும் மின்துறை தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அங்கு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஹெல்மட் ஊழல் வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் டோமினிக், புஷ்பராஜ் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் சென்னை அழைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் அவர்கள் சென்னை சென்றனர். பின்பு அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு புஷ்பராஜ் வீடு திரும்பினார்.

பின்னர் நடந்த சம்பவத்தை தனது மனைவி உமாவிடம் கூறினார். ஹெல்மட் ஊழல் வழக்கில் தன்னையும் சி.பி.ஐ. போலீசார் சேர்த்து விடுவார்களோ என அவர் பயந்து மனைவியிடம் வேதனையுடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் கணவன்- மனைவி தூங்கசென்றனர்.

நேற்று காலை உமா விழித்து பார்த்த போது படுக்கையில் கணவர் புஷ்பராஜை காணாமல் திடுக்கிட்டார். இதனால் வீடு முழுவதும் புஷ்பராஜை தேடினார். அப்போது ஸ்டோர் ரூம்மை திறந்து பார்த்த போது அங்கு புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட புஷ்பராஜுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை புஷ்பராஜுடன் பணிபுரியம் ஊழியர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்துறை அமைச்சர் வல்சராஜ், போலீஸ் டி.ஜி.பி. வர்மா ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் வல்சராஜ் இந்த பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி வருவாய்துறை வடக்கு பிரிவு துணை மாவட்ட நிர்வாக நீதிமன்ற நடுவர் தலைமையில் விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து துணை கலெக்டர் ஜவகர், தாசில்தார்கள் தில்லைவேலு, யஷ்வந்தையா ஆகியோர் நேற்று மாலை புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கிற்கு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டு இருந்த புஷ்பராஜின் உடலை பார்வையிட்டனர்.
பின்னர் இது தொடர்பாக பிஷ்பராஜின் உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பிஷ்பராஜின் உறவினர்கள் அவரது உடலை பெற்று சென்றனர்.

Source & Thanks : .newindianews.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *