மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் கழிவு கற்களை பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கும் தொழில் துறை செயலாளர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.
கல் உடைக்கும் தொழிலாளர் யூனியன் தலைவர் ஜெயராமன் தாக்கல் செய்த ரிட் மனு:மதுரை மாவட்டம் கீழையூர், கீழவளவில் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு டாமின் மூலம் கழிவு கற்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கழிவு கற்களை அளிப்பதால் அதை வெளியேற்றும் வேலை டாமினுக்கு மிச்சமானது. 2007ல் கழிவு கற்களை வழங்குவது நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து யூனியன் போராடியது. அதிகாரிகள் மீண்டும் கல் எடுக்க அனுமதித்தனர். மீண்டும் 2009 ஆக., முதல் கழிவு கற்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தொழில் துறை செயலாளர் செப்., 22ல் பிறப்பித்த உத்தரவில், “”வீணாகும் கற்கள் கீழவளவு சிகரம் ஊராட்சி பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு எடுத்து செல்ல அனுமதியளிக்கப்படுவதாக,” குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார்.நீதிபதி கே.என்.பாஷா, சுய உதவி குழுக்களுக்கு கற்களை எடுத்து செல்ல அனுமதிக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, இரு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டார்.
Leave a Reply