கோவை : கோவை “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தை, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேர்வு செய்திருப்பதால், கோவை மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வரும் ஜூன் மாதத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாநாடு எங்கு நடத்தப்படும், இதனால் அந்தப் பகுதிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்று கோவை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
எந்தப் பகுதியில் மாநாடு நடத்தப்பட்டாலும், அப்பகுதியில் ரோடு, மேம்பாலம், புதிய குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும் என்றும் மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய, கடந்த 6ம் தேதி கோவைக்கு முதல்வர் கருணாநிதி வந்தார்.எதிர்பார்த்ததைப் போலவே, “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில் செம்மொழி மாநாடு நடத்தப்படுமென்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, கோவை மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை “கொடிசியா’ தொழிற்காட்சி வளாகத்தில் ஏ,பி,சி,டி, இ என பிரமாண்டமான பல அரங்குகள் உள்ளன. இதனால், ஒரே வளாகத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோன்று, மாநாட்டுப் பிரதிநிதிகளை தங்க வைக்கவும் இங்கேயே பல வித வசதிகளை ஏற்படுத்தித் தரவும் முடியும். பெரிய அளவிலான சமையல் கூடம், உணவகம் இருப்பதால் சமையல் செய்யவும், உணவு விநியோகம் செய்யவும் சிரமம் இருக்காது. அதேநேரத்தில், இந்த வளாகத்தில் மாநாட்டை நடத்துவதால், புதிதாக எந்த கட்டமைப்பு வசதியும் கோவைக்கு கிடைக்கப்போவதில்லை என்பது நிச்சயம். ஏனெனில், நிகழ்ச்சிகள் அனைத்துமே ஒரே வளாகத்தில் முடிந்து விடும்.பல்வேறு வசதிகளும் இந்த வளாகத்தில் இருந்தாலும், கோவை நகரிலிருந்து இந்த வளாகத்துக்குச் செல்வதற்கு போதிய ரோடு வசதி இல்லை. இந்த வளாகத்துக்குச் செல்வதற்கான ரோடு, கொடிசியா, “இஸ்கான்’ அமைப்பு ஆகியவை இணைந்து அமைத்துள்ள தனியார் ரோடாகும்.இந்த ரோடு மட்டுமே பிரதான ரோடாகவுள்ளது.
மாநாட்டுக்கு வரும் பல ஆயிரம் வாகனங்கள், இந்த ரோட்டில் மட்டுமே சென்று திரும்புவது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதனால், வளாகத்துக்கு மாற்று ரோடுகளை அமைப்பதுடன், தற்போதுள்ள ரோட்டையும் அகலப்படுத்த வேண்டும். அவினாசி ரோட்டையும், சத்தி ரோட்டையும் இணைக்கும் வகையில் இந்த தொழிற்காட்சி வளாகத்தின் வழியாக புதிய ரோடு போடுவதற்கு, கடந்த 2007ல் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 40 கோடி ரூபாய் மதிப்பில் அரசுக்கு மதிப்பீடு அனுப்பப்பட்டது.அரசிடம் இருந்து ஒப்புதல், நிதி எதுவும் வராததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இப்போது இந்த ரோட்டை உருவாக்க வேண்டுமெனில், நிறைய இடங்களை அரசு கையகப்படுத்த வேண்டியிருக்கும்.
அதற்கு தற்போதுள்ள காலஅவகாசம் போதுமா என்பது தெரியவில்லை.அரசு நினைத்தால், இந்த ரோட்டை மட்டுமின்றி, விளாங்குறிச்சி வழியாக இந்த வளாகத்துக்கு வரும் ரோட்டையும் மேம்படுத்த முடியும். பீளமேடு தண்ணீர்ப் பந்தல் ரோட்டிலிருந்து வரும் இந்த ரோடு, பல இடங்களில் மண் சாலையாகவுள்ளது.மேலும், குறுகலான ரோடாகவும், குடியிருப்புகள் வழியாகச் செல்லும் ரோடாகவும் இருப்பதால் இந்த ரோட்டை அகலப்படுத்துவதிலும் பல சிக்கல் உள்ளது.
இப்பகுதியிலும் நிறைய இடங்களை அரசு கையகப்படுத்தி, இந்த ரோட்டையும் மேம்படுத்த வேண்டியது கட்டாயம்.அதேபோன்று, காளப்பட்டி ரோட்டிலிருந்தும் இந்த வளாகத்துக்கு வரும் வழியில் புதிய ரோடு அமைக்க வேண்டும். இந்த ரோடுகளில் பல இடங்களில் சிறு பாலங்கள், ரவுண்டானா, சாலைத்தடுப்பு அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் இவற்றையாவது செய்தால்தான், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாநாட்டை சுமூகமாக நடத்த முடியும்.இருக்கிற வசதியை வைத்தே மாநாட்டை நடத்தி முடிப்பதற்கு முனைப்பு காட்டும் அதிகாரிகள், இந்த வேலைகளையாவது இப்போதே திட்டமிட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Leave a Reply