சென்னை : “”தமிழகத்தில் அமையவுள்ள மூன்று அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தட்டுப்பாடின்றி கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என டில்லியில் நடந்த மாநாட்டில், ஆற்காடு வீராசாமி வேண்டுகோள் விடுத்தார்.
டில்லியில் நேற்று நடந்த மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது: மத்திய அரசு பொறுப்பேற்ற நூறு நாட்களில், 4,123 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறன் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் "மெகா பவர் பாலிசி' திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள் ளது. தமிழகத்தில் இயங்கும் அனல் மின்நிலையங்களுக்காக, 14 மில்லியன் டன் நிலக்கரி, கப்பல் மற்றும் ரயிலின் மூலம் அனுப்பப்படுகிறது. இதில், கடல் வழியாக எடுத்து வரும் நிலக்கரிக்கு விதிக்கப்படும் சேவைவரியை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 3,400 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மூன்று அனல் மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க உள்ள நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி பற்றாக்குறை உள்ளது. இதனால், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், கூடுதல் நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். நாட்டின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கான மொத்த இலக்கான 5,055 மெகாவாட்டில், முதல் இரண்டு ஆண்டில் 147 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளோம். மீதமுள்ள 4,908 மெகாவாட் மின் உற்பத்தியை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்ந்த பணியாளர்கள், இயந்திரங்கள் தேவைக்கேற்ப இல்லாததால் பணிகள் தாமதமாகிறது.
மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம், 417 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழகத்தில் 110 நகரங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் மின் உற்பத்தி, வினியோகம் ஆகியவை ஒரு பிரிவாகவும், மின் பகிர்மானம் தனிப் பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பிற நிறுவனங்கள் வரும் நிதியாண்டுக்குள் துவங்கப்படும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி பேசினார்.
Leave a Reply