புதுச்சேரி : திருமணம் ஆன இரண்டாம் நாளில் புதுமணப் பெண் இறந்த சம்பவத்தால், காலாப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு மீனவர்கள் நேற்று காலை கடலில் இரண்டரை கிலோ மீட்டர் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். கனமான பொருள் சிக்கியதால், வலையை இழுக்க முடியாமல் மீனவர்கள் சிரமப்பட்டனர். பிறகு வலையை கரைக்கு இழுத்து வந்தனர். வலையில் மீன்களுடன் இளம் பெண் பிணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காலாப்பட்டு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், இறந்த பெண் கீழ் புத்துப்பட்டு மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த நீலகண்டன் மகள் தாரகேஸ்வரி(25), பட்டதாரி ஆசிரியை என்பது தெரிந்தது.
இவருக்கும், சின்ன காலாப்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்த ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் பகீரதன்(28) என்பவருக்கும், நேற்று முன்தினம் (1ம் தேதி) காலை காலாப்பட்டில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது.புதுமணத் தம்பதிக்கு மஞ்சகுப்பத்தில் உள்ள பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கணவன் – மனைவி இருவரும் ஒரே அறையில் தங்கினர். அதிகாலை 4 மணிக்கு கணவர் பகீரதன் எழுந்து பார்த்தபோது, மனைவி தாரகேஸ்வரி மாயமாகி இருந்தது தெரிந்து திடுக்கிட்டார். இந்நிலையில், கடலில் மீட்கப்பட்டது தாரகேஸ்வரியின் உடல் என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டினர். திருமணம் ஆன இரண்டாம் நாளில் பட்டதாரி ஆசிரியை கடலில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுமணப் பெண் சாவு குறித்து தாசில்தார் விசாரணை நடக்கிறது.
Leave a Reply