புதுடில்லி : “நாட்டில் புதிதாக அமைக்கப் பட்டு வரும் ஐ.ஐ.டி.,க்கள், ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றிற்கு, திறமை வாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பது பெரும் பிரச்னையாக உள்ளது’ என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள் நினைவாகக் கொண்டாடப்படும், தேசிய கல்வி நாள் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் கூறியதாவது: முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு, திறமை வாய்ந்த பயிற்றுனர்களை, ஆசிரியர் களை ஈர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் தகவல் தொழில் நுட்பம் உட்பட பிற கல்வி மையங்களுக்கு, உயர்மட்ட அளவில் திறமை வாய்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை நியமிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இந்தியாவில், உயர்கல்வித் துறையை பெரியளவில் விரிவுபடுத்த, எட்டு புதிய தகவல் தொழில் நுட்பக் கல்வி மையங்கள் மற்றும் 15 மத்திய பல்கலைக் கழகங்களைத் துவங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், ஆறு புதிய மேலாண்மை கல்வி மையங்கள் மற்றும் ஆறாயிரம் மாதிரி பள்ளிகளை அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில், தரமான கல்வி வழங்குவதில் உள்ள பிரச்னைகளை கொள்கை வகுப்பவர்கள் கண்டறிய வேண்டும்.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த, நாட்டில் கூடுதலாக, 10 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், உயர்கல்வித் துறைக்காக, 84 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து தரப்பு குழந்தைகளும் குறிப்பாக, வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தேசிய அறிவுசார் ஆணையம் மற்றும் யஷ்பால் கமிட்டி பரிந்துரைகள்படி, உயர்கல்வித் துறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு பிரதமர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் “யுனெஸ்கோ’ தலைவர் கொய்சிரோ மட்சூரா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், “உயர் கல்வித் துறையில் தற்போது 12.4 சதவீதமாக இருக்கும் மொத்த மாணவர்கள் சேர்க்கை வீதம், 2020ம் ஆண்டு 30 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட் டுள்ளது’ என்றார்.
Leave a Reply