சென்னை : நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்கு 15 நாளில் தற்காலிக வீடுகள் கட்டித் தரப்படும். 6 மாதத்திற்கு பிறகு புதிய வீடுகள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த கனமழையால், 500க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 43 பேர் மண்ணில் புதைந்து பலியானார்கள். ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததால், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கே பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை, நிவாரண உதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடு இழந்தவர்களுக்கு இன்னும் 15 நாளில் தற்காலிக வீடுகளை கட்டித் தரவும், 6 மாதத்திற்கு பின் நிரந்த வீடுகள் வழங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1869 வீடுகள் பகுதியாகவோ, முழுவதுமாகவோ சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளை புதிதாக கட்டுவது குறித்து முதல்வர் கருணாநிதி, தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் ஸ்ரீபதி, நிதித் துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், வருவாய்த் துறை செயலர், குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கலந்து கொண்டனர். முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்ட 6 மாதம் ஆகும் என்பதால், தலா ரூ.70 ஆயிரத்தில் தற்காலிக வீடுகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. 15 நாளில் இவை கட்டப்பட்டு விடும். தற்போது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியிருப்போரை தற்காலிக வீடுகளில் குடியமர்த்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 6 மாதத்திற்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply