மும்பை : பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்களா… அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, அடிக்கடி பயன்படுத்தாத பழைய தங்க நகைகள், டெபாசிட்டாக ஏற்கப்படும். இத்திட்டத்தில் பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்படும். சுத்தத் தங்கமாக்கி (999 சுத்தம்) பிஸ்கெட்டுகளாக மாற்றப்படும்.
அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளருக்கு அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும். தங்க டெபாசிட் தொகை மீது 1.5 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும்.பணக்காரர்கள், கோயில் அறக்கட்டளைகள், குடும்பங்களில் பயன்படுத்தாத தங்கம் அதிகளவில் வெறுமனே உள்ளது. அது அவர்களுக்கும் பாதுகாப்பற்றது. வருமானமும் இல்லாதது. அவற்றை டெபாசிட் செய்து வட்டி பெற இந்த திட்டம் உதவும்.
இந்த திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை தேவை. குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
Leave a Reply