சென்னை : “பஸ்களில் விளம்பரம் செய்வது குறித்து, தேவைப் பட்டால், மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலர் கதிர்மதியோன் என்பவர் தாக்கல் செய்த மனு:
தனியார் மற்றும் அரசு பஸ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. பஸ்களின் வெளிப்புறங்களில் விளம்பரங்கள் செய்யப்படும் போது, சாலைகளில் செல்பவர்கள் மற்றும் வாகனங் களில் செல்பவர்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. பஸ்களின் பின்புறம் முழுவதும் விளம்பரங் களை வெளியிடுகின்றனர். எனவே, அரசு மற்றும் தனியார் பஸ்களில் விளம்பரங்கள் செய்யப்படு வதை குறிப்பிட்ட கால வரையறைக்குள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்களில் விளம்பரங்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதிகள் முகோபாதயா, துரைசாமி அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக உள்துறை சிறப்புச் செயலர் டாக்டர் கருத்தையா பாண்டியன், போக்குவரத்து துறை கமிஷனர் மச்சேந்திரநாதன், போக்குவரத்து துறை கூடுதல் போலீஸ் கமிஷனர் ஷகில் அக்தர் ஆஜராகினர்.
“டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
அரசு மற்றும் அதிகாரிகள் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், “பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் விளம்பரங்கள் செய்வது குறித்து, அரசு சில வழிமுறைகளை கொண்டு வருவதற்கு யோசனை செய்து வருகிறது. தேவைப்பட்டால் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படும்’ என கூறியுள்ளார்.இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலை கருதி, அதிகாரிகள் குழு கூடி ஒரு வழிமுறையை உருவாக்கவோ, மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வரவோ முடிவெடுக்க ஒரு வாரகாலம் அவகாசம் அளிக்கலாம். மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அடுத்த முறை அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராக தேவையில்லை.இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி மூன்று விளம்பர நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு ஏற்கிறோம்.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply