சென்னை : சமச்சீர் கல்வி பாட திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறிப்புதவி நூல்கள் சேகரித்தல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் போன்ற ஆயத்த பணிகள் நடக்கின்றன.
இதற்காக, ‘புதிய பாட திட்டம் தயாரித்தலின் உத்திகள்” என்ற தலைப்பில் பள்ளி கல்வி வளாகத்தில் நேற்று கருத்தரங்கு நடந்தது.அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (என்சிஇஆர்டி) இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசியதாவது:தமிழகத்தில் சமச்சீர் கல்வி பொது வரைவுத் திட்டம் உருவாக்கப்பட்டு என்சிஇஆர்டி பார்வைக்கு வந்தது. பாட புத்தகம் தயாரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் புதிய அறிவை வளர்க்கும் வகையில் பாடங்கள் அமைய வேண்டும். பள்ளிக்கு வெளியில் மாணவர்கள் சந்திக்கும் சமூக நிகழ்வுகளோடு வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களும் இணைந்து போக வேண்டும்.அப்படி இல்லை என்பதால்தான் நமது பாட திட்டம் குழந்தைகளுக்கு மன அழுத்தம் கொடுப்பதாக உள்ளது.
பாட புத்தகங்கள் குறிப்பிட்ட ஒரு சார்பாக இல்லாமல் கிராமங்கள், நகரங்களின் கலாசாரங்களை ஒட்டியதாக இருக்க வேண்டும். எல்லா துறைகளையும் கொஞ்சம் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பாட புத்தகங்கள் எழுத கூடாது.அந்தந்த வயதுக்கு ஏற்றதை சொல்லி கொடுப்பதாக இருக்க வேண்டும்.கல்வி கற்கும் குழந்தைகள் யோசிப்பதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.ஆசிரியர்களும் பாடங்களை புரிந்து கொண்டு நடத்துவதற்கு ஏற்ப புத்தகத்தில் நெகிழ்வு தன்மை இருக்க வேண்டும். தேர்வு முறை இன்னும் நெகிழ்வாக இருக்க வேண்டும். மாணவர்கள் பாடங்களை எவ்வளவு புரிந்து கொண்டார்கள் என்பதை கணக்கிடுவதாக இருக்க வேண்டுமே ஒழிய, எவ்வளவு மதிப்பெண் எடுத்தார்கள் என்ற அளவில் இருக்க கூடாது.கணக்கு பாடம் கற்பிக்க நிறைய நேரம் ஒதுக்க வேண்டும்.
அறிவியல் பாட புத்தகம் எழுதும் போது,தேவையானவற்றை மட்டும் கொடுக்க வேண்டும்.பாட திட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குட்பட்டு புத்தகங்கள் எழுதாமல், புத்தகங்களை எழுதிவிட்டு அதற்கேற்ப பாட திட்டம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு பேராசிரியர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.5 நாளில் பாட திட்டம்: முன்னதாக பள்ளி கல்வி அமைச்சர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘சமச்சீர் கல்விக்கான பாட திட்ட வரைவு வெளியிடப்பட்ட பிறகு மாவட்ட அளவில் 1,500, வட்டார அளவில் 1,000 கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களிடம் கருத்து பெறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் பாடத்திட்டம் 2 நாளில் இறுதி செய்யப்படும். பின்னர் முதல்வரிடம் கொடுத்து கருத்து கேட்கப்படும். இதையடுத்து 5 நாட்களில் சமச்சீர் கல்வி பாட திட்டம் வெளியிடப்படும்’’ என்றார்.
Leave a Reply