மதுரை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்த, இரு பெண் குழந்தைகளை பெற்றவருக்கு நிதி வழங்கும்படி சமூக நலத்துறையினருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. போடியை சேர்ந்த பிருந்தா தாக்கல் செய்த ரிட் மனு:
எனக்கு 1999ல் ஒரு பெண் குழந்தையும், 2002ல் இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தன. குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் 22, 200 ரூபாயும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 15,200 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இத்திட்டத்திற்கு தகுதியான பெண்கள் சரியான காலத்திற்குள் வராததால் அரசு உத்தரவில் திருத்தம் செய்தது. குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என உத்தரவிட்டது.
ஏற்கனவே விண்ணப்பிக்க தாமதமானதால் எனக்கு நிதி வழங்கப்படவில்லை. அரசு புதிய உத்தரவின்படி எனக்கு நிதி பெற தகுதியுள்ளது. நிதி வழங்க கோரி சமூக நலத்துறையினருக்கு விண்ணப்பித்தேன். என் மனுவை நிராகரித்தனர். அதை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் டி.முருகேசன், ஜி.எம்.அக்பர்அலி கொண்ட பெஞ்ச், “” பெண் குழந்தைகள் பயனடைய வேண்டும் என்பதற்காக அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியது. அதனால் தான் விண்ணப்பிக்க கால நீட்டிப்பும் செய்தனர். மனுதாரர் மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து இருப்பதால் நிதி வழங்க வேண்டும்,” என சமூக நலத்துறை செயலாளர், இயக்குனர், மாவட்ட சமூக நல அதிகாரிக்கு உத்தரவிட்டது.
Leave a Reply