பெயர் மாறி மீண்டும் உதயமான புதினம் இணையத்தளம்!

posted in: உலகம் | 0

வன்னி: ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற புதினம் இணையத்தளம் தற்போது புதிய பெயரில் மீண்டும் உதயமாகியுள்ளது.

ஈழப் போரின் போது ஈழத்தில் நடந்தவற்றை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இணையத்தளம் புதினம். உள்ளதை உள்ளபடியே சொன்னதும், ஈழப்படுகொலைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியும் வந்த தளம் புதினம்.

ஆனால் திடீரென புதினம் தளம் நிறுத்தப்பட்டது பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந் நிலையில் புதினம் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு இணையத்தளம் வெளியானது. ஆனால் அது ஒரிஜினல் புதினம் அல்ல என்று ஈழத் தமிழர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் புதினம் தற்போது புதினப் பலகை என்ற பெயரில் புத்துயிர் பெற்று வலையுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக புதினப்பலகை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு…

இணைய ஊடகங்களான “புதினம்” மற்றும் “தமிழ்நாதம்” ஆகியன நிறுத்த வைக்கப்பட்ட நிகழ்வு- ஒரு வரலாற்றுத் துயரம்தான்.

ஈழத் தமிழரின் போராட்ட வாழ்வில் இதுவும் ஒரு பரிமாணத்தில் பின்னடைவுதான்.

தமிழ் பேசும் மக்களிடம் மட்டுமல்லாது- உலக ராஜதந்திர வட்டாரங்கள், அரசியல் கொள்கை வகுப்பாளர்கள், முன்னணிப் புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக ஊடகத்துறையினர் மத்தியிலேயும் கவனத்தை ஈர்த்திருந்த- நம்பகத் தன்மையான ஈழத் தமிழர்களின் குரல் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருந்த – புதினம் தளம் மூட வைக்கப்பட்டது என்பது,

தமிழர்களுக்குள் குருட்டு நம்பிக்கைகளை வளர்த்து, நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைக் காணவைத்து, தமிழினத்தைத் தொடர்ந்தும் ஒரு மாயைக்குள் வைத்திருக்க முயலுகின்ற நேர்மையற்றவர்களின் சதி.

தமிழர்களிடம் உண்மை சென்றடைவதைத் தடுக்க முயல்வோர் புரிந்து வரும் தொடர் அடாவடித்தனத்தின் உச்சம் தான் இது.

ஆனால்- உண்மையினதும் சத்தியத்தினதும் பலத்தில் நின்று, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி- துணிவுடனும் இறுமாப்புடனும் சேவையாற்றுபவர்கள் இந்தச் சலசலப்புக்களுக்கு எல்லாம் அச்சமுறுவதோ அல்லது பணிந்து போவதோ கிடையாது.

“புதினம்” தளத்தின் பல்துறை பங்காளர்களாகிய நாங்கள்- அதன் செய்தியாளர்கள் மற்றும் அதன் ஆர்வலர்களின் துணையுடன், சமூக அக்கறை கொண்டவர்கள் பலரின் ஒத்துழைப்புடன் “புதினப்பலகை” www.puthinappalakai.com, www.TamilNewsBoard.com ஆகிய தளத்தைத் தொடங்கியுள்ளோம்.

சுருக்கமாக- புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கும் தளத்தின் புதிய பெயர் தான் “புதினப்பலகை.”

செய்திகளில் நம்பகத்தன்மையையும், அவற்றை வெளியிடுவதில் தனித்துவத்தையும், ஊடகவியலில் ஒரு தரத்தையும் “புதினம்” தளத்தில் பேணிய நாங்கள்- அதே நம்பகத்தன்மையையும், தனித்துவத்தையும், தரத்தையும் “புதினப்பலகை”யிலும் தொடர்ந்தும் பேணுவோம்.

தமிழ் பேசும் மக்களின் “நலன்” மட்டும் தான் என்றென்றும் “புதினம்” தளத்தின் இலக்காக இருந்து வந்தது. அந்த இலக்கை மட்டுமே குறியாக வைத்துத் தான் நாம் எப்போதும் இயங்கி வந்தோம்.

ஆனால்- மே 2009 வரையான காலத்தில் தமிழ் பேசும் மக்களின் “நலனும்” தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் லட்சியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புற்று இருந்ததால்- “புதினம்” தளமானது- விடுதலைப் புலிகளின் “ஊதுகுழல்” என ஒரு சாராராலும், அவர்களது “அதிகாரபூர்வத் தளம்” என இன்னொரு சாராராலும் கருதப்பட்டு வந்தது.

மே 2009க்குப் பின்னான காலத்தில்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முழுமையாகவே செயலிழக்கச் செய்யப்பட்ட போதும்- “புதினம்’, எப்போதும் போல, தமிழ் பேசும் மக்களின் “நலன்” என்ற இலக்கு நோக்கியே தொடர்ந்தும் இயங்கி வந்தது.

மே 2009க்குப் பின்னான அந்தக் காலத்தில்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருந்த பகுதி தன்னை ஒரு சுய மீளாய்வுக்கு உட்படுத்திய போது- “புதினம்”, எப்போதும் போல, தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களின் “நலனை” மட்டுமே முன்னிறுத்தி அவர்களிடம் உண்மையைக் கொண்டு சென்றது.

ஆனால்- அதுவே பின்பு பெரும் சர்ச்சையாகி, ஒரு வகையில் “துரோகம்” எனவும் ஆகி, பழிச்சொல்லுக்கும் உள்ளாகி- கடைசியில், ஆயுதங்களற்ற வன்முறைக்கும் இலக்காகியபோது- “தனிப்பட்ட காரணங்களினால்” என அறிவித்து விட்டு “புதினம்’ தளத்தின் பழைய நிர்வாகம் அதனை இழுத்து மூடும் நிலைக்கும் வந்தது.

“புதினம்” தளத்தை மீண்டும் இயக்குவதற்கு நாங்கள் எடுத்த எந்த முயற்சியும் கைகூடாது போன பின்னணியில்- அதன் பெயரிலும் அதே வடிவத்திலும் புதுத் தளம் தொடங்கி அதன் நற்பெயரையும், நம்பகத் தன்மையையும், உயர் தரத்தையும் மாசுபடுத்த சிலர் முயன்றுள்ள சூழ்நிலையில்- புதிய நிர்வாகத்தின் கீழ்- “புதினப்பலகை” என்ற புதிய பெயரின் கீழ் இயங்கத் தொடங்குவதற்கு “புதினம் குழுமம்” ஆகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

“புதினப்பலகை” தமிழ் பேசும் மக்களுடன் என்றென்றும் இணைந்திருந்து- உண்மையை மட்டுமே அவர்களிடம் எடுத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.

இலங்கைத் தீவிலும், தமிழ்நாட்டிலும், உலகப்பரப்பு எங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களதும், தமிழரல்லாத தமிழர் நலன் விரும்பிகளதும், மற்றும் அனைத்துலக சமூகத்தாரினதும்- ஒருங்கிணைப்புடனும், ஒத்துழைப்புடனும் “புதினப்பலகை” பணியாற்றும்.

தமிழ் சமுகத்தின் இயல்புகளான- உள்வாங்கும் சுபாவம், திறந்த மனப்பக்குவம், ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் என்பவற்றை வளர்த்தெடுக்கும் ஒரு தளமாகவும், அவற்றுக்கு வலுச்சேர்த்து, அவற்றைத் தமிழரது வாழ்வியல் பண்பாடாக மாற்ற முயல்வோருக்கான ஒரு களமாகவும் “புதினப்பலகை” விளங்கும்.

உலக வரலாற்றை நகர்த்திய ஏனைய தேசிய இனங்களின் பட்டறிவுகளைப் பரிமாறி, உலகின் செல்நெறி பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்று- அவற்றுக்கு அமைவாக- ஈழத் தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலக மட்டத்தில் எடுக்கப்படும் ஈழத்தமிழரது அரசியல் முன்முனைவுகளுக்கும் “புதினப்பலகை” துணையாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *