வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், இப்போது “காஸ்ட்லி’யான பேச்சாளர் ஆகிவிட்டார். ஒரு முறை மேடையேற 50 லட்சம் ரூபாய் “பீஸ்’ வாங்குகிறார்.
அமெரிக்காவின் அரசியல், உலக அரங்கில் வித்தியாசமானதுதான். அதன் அதிபர்கள் பலர், தங்கள் பதவிக் காலத்துக்குப் பின், முன் பார்த்த வேலை அல்லது தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்யத் தொடங்கி விடுவர். ரொனால்டு ரீகனிலிருந்து கிளிண்டன் வரை இப்படித்தான். இந்தப் பட்டியலில் இப்போது புஷ்ஷும் சேர்ந்து விட்டார்.
"அரசியல், பொருளாதாரம், நிர்வாக மேலாண்மை, தலைமைப் பண்புகளுடன் திகழ்வது எப்படி?' போன்ற தலைப்புகளில் மக்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பேசக் கூடிய நட்சத்திர பேச்சாளர் ஆகிவிட்டார். இவரது நிகழ்ச்சிகள் "கெட் மோட்டிவேட்டட்' என்று அழைக்கப்படுகின்றன. "செயல்திறன் மிக்க, நகைச்சுவையுடன் கூடிய, சுறுசுறுப்பான, எதிர்பார்ப்புகளை அள்ளி வீசக் கூடிய, மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்ச்சி இது. இதில், உலகப் புகழ் பெற்ற "சூப்பர் ஸ்டார்' பேச்சாளர் ஜார்ஜ் புஷ் தோன்றுகிறார்' என்று வெப்சைட்டில் இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் சான் ஆன்டோனியோவில் பேசிய புஷ், தொடர்ந்து தனது சொந்த மாநிலமான டெக்சாசிலும் பேசியுள்ளார். ஒரு நிகழ்ச்சிக்கு இப்போது 50 லட்ச ரூபாய் வாங்கும் "டாப் ஸ்பீக்கர்' இவர்தான். இவர் மனைவி லாராவும், இதே போல பேச்சாளராகி சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார். இந்த ஆண்டு, இறுதிக்குள் இவர்கள் இருவரும் கோடிக்கணக்கில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்கள் என்று பத்திரிகைகள் கிண்டலடிக்கின்றன. புஷ் தனது பேச்சில் "பொருளாதார பாஷையில் சொன்னால், எனது ஆட்சி வரை பரம்பரைச் சொத்தாக வந்த பொருளாதார மந்தத்தை நான்தான் சீர் செய்தேன். எனக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது' என்பது போன்ற சுயபுராண வசனங்களோடு, அவ்வப்போது ஒபாமாவையும் தாக்கிப் பேசத் தவறுவதில்லை.
Leave a Reply