சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
சென்னை புரசைவாக்கத்தில் மோகன்குமார் என்பவர் மோகன்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் கண்ணன் (27) என்ற ஊழியர் கடந்த மாதம் 20ம் தேதி ரூ. 14.5 லட்சம் பணத்துடன் நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அண்ணாநகர் சாந்தி காலனி ஏ.ஜி.பிளாக் பகுதியில் வந்தபோது அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மிளகாய் பொடி தூவி தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றது.
இந்தக் கும்பலைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
மோகன்குமாரிடம் பெரம்பூரை சேர்ந்த ரூபி (40) என்ற பெண் 1.5 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி, அதை 2.5 சதவீத வட்டிக்கு மற்றவர்களுக்கு கடன் கொடுத்து வந்தார். ரூபியும் அவரது கணவரும் இணைந்து இந்தத் தொழிலை செய்து வந்தனர்.
ஆனால், சமீபத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் மோகன்குமாருக்கும், ரூபிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ரூபி கூலிப் படையை அனுப்பி பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூபி அனுப்பிய கூலிப்படை கும்பலை சேர்ந்த இம்ரான், செய்யது இம்ரான், முகமது ரியாத் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தை கொள்ளையடிப்பதற்காக இவர்களுக்கு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார் ரூபி. இவர்களுக்கு பின்னணியில் செயல்பட்ட தினேஷ் என்ற வக்கீல் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வட்டிக்குப் பணம் கொடுக்கும் ரூபிக்கு அரசியல் பின்னணி இருந்ததால் கிட்டத்தட்ட தாதா போல செயல்பட்டு வந்துள்ளார். அவரது அரசியல் செல்வாக்கால் போலீசாரால் முதலில் அவரை நெருங்க முடியவில்லை.
ஆனாலும் தனிப்படையினரை அவரை 2 நாட்களுக்கு முன் கைது செய்துவிட்டு ரகசியம் காத்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்த பின்னரே அவர் கைதான விவரமே வெளியில் வந்துள்ளது.
ரூபியிடமிருந்து கொள்ளைப் பணம் முழுவதும் மீட்கப்பட்டது
Leave a Reply