மதிப்பெண் சான்றிதழில் இனி போட்டோ : போலிகளை ஒழிக்க கல்வித்துறை அதிரடி

posted in: கல்வி | 0

tblfpnnews_95220148564பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தற்போது வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில், மாணவர்களின் புகைப்படம் இல்லை. மாணவரின் பெயர், பதிவு எண், படித்த பள்ளி பெயர் போன்றவை மட்டுமே இருக்கின்றன. இந்த விவரங்களைக் கொண்டு, சில கும்பல், போலி மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு, புழக்கத்தில் விடுகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு வரும்போது, இதுபோன்ற போலி மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்கின்றனர். போலி சான்றிதழ்களை ஒழிப்பதற்கும், சான்றிதழ்கள், சம்பந்தப்பட்ட மாணவர்களுடையது தான் என்பதை உறுதி செய்யவும், சான்றிதழில் மாற்றம் கொண்டு வரவும், தேர்வுத்துறை ஏற்கனவே திட்டமிட்டது. அதன்படி, மாணவர்களின் புகைப் படங்களை, “ஸ்கேன்’ செய்து, அதை மதிப்பெண் சான்றிதழில் அச்சடித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம், சோதனை முயற்சியாக கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு தேர்வில் அமல்படுத்தப் பட்டது.

எதிர்பார்த்தபடி, புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் சிறப்பாக அமைந்ததால், அந்த திட்டத்தை 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் விரிவுபடுத்த தற்போது திட்டமிடப் பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்களை அச்சடிக்க, கூடுதல் செலவாகும் என்றாலும், அதில் கிடைக்கக் கூடிய நன்மைகளை கருத்தில் கொண்டு, புதிய வடிவில் சான்றிதழ்களை வழங்க தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது. இத்திட்டம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மற்றொரு திட்டம்: மேலும், பொதுத்தேர்வு எழுதும் 16 லட்சம் மாணவர்களுடைய ஒட்டுமொத்த சான்றிதழ்களையும் கணினிமயமாக்குவதற்கும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. சான்றிதழை தொலைத்து விட்டு, நகல் சான்றிதழ் கேட்பவர்களுக்கு, உடனே தர முடியாத நிலை இப்போது உள்ளது. சான்றிதழ்களை கணினிமயமாக்கி விட்டால், உடனுக்குடன் நகல் சான்றிதழ்களை தர முடியும். அத்துடன், பராமரிப்புப் பணிகளும் சுலபம். தேர்வுத் துறையை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ், இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *