சென்னை: மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், மீன் பிடித்தலை ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டாமென, மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:கடல் எல்லைக்கு அப்பால், பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் மீன் பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும், “கடல் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு சட்டத்தின்’ மீது, தமிழக மீனவர்களுக்கு உள்ள சந்தேகங்களை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே, வரைவு மசோதா மீது தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், அவை வரைவு சட்டத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீனவர்களின் கருத்துக்களை பரிசீலிக்காமல் இந்த சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது மற்றும் அதிலுள்ள அபராத அம்சங்கள் கடுமையாக உள்ளது ஆகியவை தான், தமிழக மீனவர்களுக்கு உள்ள முக்கிய வருத்தம்.கடல் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை விதிகள், தமிழகம் உட்பட கடல்சார்ந்த அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளன. தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், மாநிலத்தின் கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மீன்பிடித்தலை முறைப்படுத்தி, கண்காணிக்க வகை செய்கிறது.
தற்போதுள்ள வரைவு சட்டத்தில், தமிழக மீனவர்களுக்கு பாதகமான அம்சங்கள் வருமாறு:எந்த கடல் மண்டலத்திலும், நீர் எல்லைக்கு வெளியே மீன்பிடிப்பதற்கு எந்த இந்திய மீன்பிடி படகுகளும், குறிப்பிட்ட பெர்மிட் பெற வேண்டுமென இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநில கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் உரிமம் பெற்றிருந்தாலும், அவர்கள் இன்னொரு உரிமம் பெறாமல், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க அனுமதியில்லை என்றாகிறது.
கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன் ஆதாரங்கள் முற்றிலும் பயன்படுத்தப்பட்ட நிலையில், மோட்டார் படகு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள மீனவர்கள் மற்றும் இயந்திர மோட்டார் படகுகள், கடலில் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் உள்ள மீன் ஆதாரங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர்.தெளிவான புவியியல் மண்டலம் இல்லாத நிலையில், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடித்தலை தடுப்பது, மீனவர்களுக்கு நடைமுறையில் சாத்தியமில்லாதது.மேலும், மீனவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துக்களை பெற வேண்டும் என்ற ஷரத்தை இச்சட்டத்தில் சேர்க்க வேண்டுமென ஏற்கனவே தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
குற்றங்கள் மற்றும் அபராதங்கள் பற்றிய அம்சத்தை பொறுத்தவரை, 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடித்தலில் ஈடுபடும் படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் மிகவும் கடுமையாகவும், அதிகமாகவும் உள்ளன. தொடர்ந்து மூன்று மாதங்களில், இரண்டு முறை மட்டுமே இதுபோன்று மீன்பிடிக்க படகுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உரிமம் இல்லாமல் கடல் எல்லைக்கு அப்பால் மீன்பிடிக்கும் படகுகளுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்மூலம், எந்த மீன்பிடி படகுகளும் இந்திய எல்லைக்குள்ளேயே 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதால், மீனவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மீனவர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு இது எதிராக உள்ளது. எனவே, எனது கவலைகளை பரிசீலித்து, அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். வரைவு சட்டத்தை உரிய அமைப்பின் முன் தாக்கல் செய்வதற்கு முன்பாக, விரிவான வகையில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.ஏற்கனவே, இலங்கை கடற்படையினர் கொடுமைப்படுத்துவதாலும், எல்லைக்குள் உள்ள பகுதியில் கடல் மீன் உற்பத்தி இல்லாததாலும் பாதிக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு, இந்த சட்டம் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும். எனவே, இவ்விஷயத்தில் உடனே தலையிட்டு, விவாதங்களை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
Leave a Reply