மும்பை: மும்பைத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பெட்ரோல் “பங்க்’ உரிமம் வழங்கும் நடவடிக்கை தீவிரமாக நடப்பதாக மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
மும்பைத் தாக்குதலில் ஹேமந்த் கர்கரே, விஜய் சலாஸ்கர், சந்தீப் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகள், வீரர்கள் பலர் பலியாயினர். பலியான வீரர்களின் குடும்பங்கள் நலவாழ்வு கருதி, அவர்களுக்கு பெட்ரோல் “பங்க்’ நடத்தும் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஐந்து வீரர்களின் குடும்பங்களுக்கு பெட் ரோல் “பங்க்’ மற்றும் எல்.பி.ஜி., முகவர்களுக்கான உரிமங்களை கடந்த வாரம் வழங்கினார்.
இதையடுத்து, விஜய் சலாஸ்கர் உள்ளிட்ட ஆறு வீரர்களின் குடும்பங்களுக்கு இன்னும் ஒருமாதத்துக்குள் உரிமம் வழங்கப்பட்டு விடும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா நேற்று தெரிவித்தார்.அவர் கூறியதாவது:உரிமம் வழங்குவதில் நிலம் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினரின் அனுமதி உள்ளிட்ட சில பிரச்னைகள் உள்ளன.
இது குறித்து முதல்வர் அசோக் சவானிடம் பேசியிருக்கிறேன். சோனியா தனிப்பட்ட முறையில் என்னிடம், பலியான 18 பேரின் குடும்பங்களுக்கு எல்லாவிதத்திலும் உதவும்படி கூறியிருக்கிறார்.விஜய் சலாஸ்கர் மற்றும் கான்ஸ்டபிள் துக்காராம் குடும்பங்களுக்காக சிறந்த நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. டிசம்பர் இறுதிக்குள் அவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமம் வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு தியோரா தெரிவித்தார்.பலியானோரின் 18 குடும்பங்களில், தேசிய பாதுகாப்புப் படை வீரரான சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெற்றோர் மட்டும், அரசு வழங்கும் உரிமத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
Leave a Reply