முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரளப் போலீûஸ ஈடுபடுத்த வேண்டாம் என்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் அந்தப் பணியை ஒப்படைப்பதே சிறந்தது எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முதல்கட்டமாக இப்போதுள்ள 136 அடியில் இருந்து 142 அடி உயரம் வரையிலே நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்றது.
மத்திய நீர்வளக் குழுமம் தெரிவித்த பரிந்துரைகளின்படி மீதமுள்ள பணிகளை, கேரள அரசின் தடங்கல்கள் காரணமாக தமிழகம் இன்னமும் செய்து முடிக்க இயலவில்லை.
எனவே, மத்திய நீர்வளக் குழுமத்துக்கு திருப்தி அளிக்கக் கூடிய வகையில், பணிகளை தமிழகம் செய்து முடித்தவுடன் நீர்மட்ட அளவை 152 அடி வரை தேக்கி வைக்க தனிப்பட்ட வல்லுநர்கள் குழு அணையினை ஆய்வு செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அணையை வலுப்படுத்தும் பணியில் தடை ஏதும் ஏற்படுத்தக் கூடாது என கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்துக்கு பலவகைகளில் கேரளம் இடையூறுகளை அளித்து வருகிறது.
அதில் முக்கியமானவைகள்:
முல்லைப் பெரியாறில் நீர் அளவிடும் கருவி அகற்றப்பட்டது. முல்லைப் பெரியாறின் கைப்பிடிச் சுவரை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தினர். மேலும், கொச்சியில் உள்ள கடற்படை அதிகாரிகளை அழைத்து அணையை ஆய்வு செய்ய முற்பட்டனர். மத்திய அரசுத் துறையின் அதிகாரிகள் என சிலர் கூறிக் கொண்டு அணைக்குள் வந்து நீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். அணையை வேறு சிலர் விடியோ படம் எடுத்துள்ளனர். சுற்றுலாப் பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முல்லைப் பெரியாறு அணை பகுதிக்குச் செல்ல தமிழகக் குழுவினர் சென்றபோது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் புகைப்படக்காரர்கள் அணையில் புகைப்படங்கள் எடுப்பதற்காக, தமிழகப் பொறியாளர்களுக்கு முன்னமே தெரிவிக்காமலும், முன் அனுமதி பெறாமலும் சென்று வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், கேரள வனத்துறை அதிகாரிகள், தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தங்களது அலுவலகப் பணியைச் செய்ய விடாமல் தடுப்பது ஆழ்ந்து கவலை அளிப்பதாக உள்ளது.
பல்வேறு தருணங்களில் தமிழக அரசின் பொறியாளர்கள் தங்களது பணியினை முறைப்படி செய்வதைத் தடை செய்யாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய அறிவுரையை கேரள அரசு வழங்க வேண்டும்.
கேரள அரசு தொடர்ந்து இடையூறுகளை அளித்து வருகிறது. இதைத் தடுக்கும் பொருட்டு, அணையின் பாதுகாப்புப் பணியை கேரள காவலர்களிடம் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள், அணையின் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வதே சிறந்ததாக இருக்கும்” என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply