புதுடில்லி:ரயில் விபத்து நடக்கும் என்று தெரிந்து அதுபற்றி முன்கூட்டியே ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரிவிப்பவர்களுக்கு ரயில்வேயில் வேலை தரப்படும்,” என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் தாரகேஸ்வர்-நரிக்குல் இரட்டைவழி ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
சமீப காலமாக போராட்டம் மூலம் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக ரயில்கள்தான் அதிகமாகத் தாக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எதற்கெடுத்தாலும் ரயில்வே தண்டவாளங்களுக்கு நடுவில் வந்து நின்று கொள்கின்றனர். இவர்களாலேயே பாதி ரயில்கள் தடம் புரண்டு விடுகின்றன.ரயில்வே நமது நாட்டின் உயிர்மூச்சு. ரயில்வேயில் மட்டும் 14 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கிராம மக்கள் நமது சொத்துக்கள். யாராயிருந்தாலும் தங்கள் பகுதியில் கடந்து செல்லும் ஒரு ரயில் விபத்துக்குள்ளாகப் போகிறது என்று உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக ரயில்வேக்குத் தகவல் கொடுங்கள். அப்படி தகவல் அளிப்பவர்களின் எதிர்காலத்தை நான் கவனித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு ரயில்வேயில் வேலை தருவேன். அமைச்சர்கள் மாறலாம். ஆனால், ரயில்வே ஊழியர்கள் நிரந்தரமானவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு மம்தா தெரிவித்தார்.
Leave a Reply