மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மாயமான 9 நாள் குழந்தை ராமேஸ்வரத்தில் மீட்கப்பட்டதாக இருக்குமா? என கருதி டி.என்.ஏ., சோதனை நடத்த மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் ஆத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த ரிட் மனு: என் மனைவி பஞ்சவர்ணத்திற்கு அக்., 13ல் சின்னாளப்பட்டியில் ஆண் குழந்தை பிறந்தது. அக்., 31ல் சின்னாளப்பட்டி கஸ்தூரிபா ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாள் உணவு வாங்க சென்ற போது குழந்தையை காணவில்லை. சின்னாளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. குழந்தையை கண்டுபிடித்து தர உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
மனு நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சரவணன் ஆஜரானார். அரசு வக்கீல் ஹேரால்டு சிங் வாதிடுகையில், “ராமேஸ்வரத்தில் அனாதையாக விடப்பட்ட ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தற்போது சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் அக்குழந்தை உள்ளது. காணாமல் போனது அந்த குழந்தையாக இருக்கலாமா ? என டி.என்.ஏ., சோதனை நடத்தவுள்ளோம்,” என்றார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “”மனுதாரர் மனைவி மற்றும் மீட்கப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ., சோதனை நடத்தி அந்த அறிக்கையை நவ., 6ல் தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டார்.
Leave a Reply