கோவை: விண்ணில் இருந்தபடியே விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, 1998ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன. 73 மீட்டர் நீளம், 108.5 மீ அகலம் உடைய இந்த நிலைய கட்டுமானப்பணிகள் 2010 வரை நடைபெறும்.
தற்போது, விண்ணில் பூமியில் இருந்து, 336 முதல் 346 கி.மீ. உயர சுற்றுவட்ட பாதையில் மணிக்கு 27,724 கி.மீ. வேகத்தில் இந்த விண்வெளி நிலையம் சுற்றி வருகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 15.7 முறை பூமியை இந்த மையம் சுற்றி வருகிறது. தமிழகத்தில் இன்று மாலை 6.29 மணிக்கு வடமேற்கு அடி வானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6.35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் இந்த மையம் மறைகிறது. இதேபோல், டிசம்பர் 5ம் தேதி காலை 5.53 மணிக்கு தென்மேற்கு அடிவானத்தில் தோன்றி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 5.59 மணிக்கு வடகிழக்கு அடிவானத்தில் மறைகிறது.
இதை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சில விநாடிகள் வித்தியாசத்தில் பார்க்க முடியும். பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல் தோற்றம் தரும். தொலைநோக்கி உதவி இல்லாமல், வெறும் கண்ணால் பார்க்க முடியும். செயற்கைக்கோள்கள் பொதுவாக சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் வான்வெளியில் செல்லும்போது சூரியஒளி பட்டு பிரதிபலிப்பதால் நம் கண்களுக்கு தெரிகிறது.
Leave a Reply