சங்கரன்கோவில்: விசைத்தறிக்கான நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.
சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 5000 க்கும் அதிகமான விசைத்தறி இயங்கி வருகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு காட்டன் சேலைகள், கைலிகள், கர்சீப்புகள், வேட்டி, துண்டு உள்ளிட்ட ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் காட்டன் சேலை ரகங்கள் மற்றும் கைலிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் மற்றும் கைலிகள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
காட்டன் சேலைகள் மற்றும் கைலிகளுக்கு 60ம் நம்பர் கோமுடு நூல் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நூல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 760 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிறிது சிறிதாக விலை உயர்த்தப்பட்டு, தற்போது 1 கட்டு நூலின் விலை 900 ரூபாயாக உள்ளது. இது சுமார் 20 சதவீத விலை உயர்வாகும். நூல் விலை உயர்வுக்கு பஞ்சு ஏற்றுமதி மற்றும் மின்தடை ஆகியன காரணமாக கூறப்படுகிறது. இதனால் நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவிலில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயணியர் விடுதி முன்பு நடத்தப்பட உள்ளது.
Leave a Reply