சென்னை: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் 5 பொறியியல் கல்லூரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இக்கல்லூரிகளின் விதிமூறல்களுக்கு பக்கபலமாக இருந்த ஏஐசிடிஇ அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோயம்பேடு, சென்னை யை அடுத்துள்ள அடையாளம்பட்டு மற்றும் இருங்காட்டுக்கோட்டை, நாகர்கோயில், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றின் அறக்கட்டளைகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஏஐசிடிஇ வகுத்துள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறி கல்லூரிகள் நடத்தப்படுகின்றன என்றும், ஏஐசிடிஇ அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் குற்றச் சதியில் ஈடுபட்டு ஏஐசிடிஇன் அனுமதி மற்றும் அங்கீகார நீட்டிப்பைப் பெற்றுள்ளன என்றும் கல்லூரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கல்லூரிகளை நடத்துவதற்கான வைப்புத் தொகை, குறிப்பிட்ட அளவு நிலங்கள் ஆகியவற்றை போலியான மற்றும் மோசடி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டியுள்ளன. தவிர, மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் கல்லூரிகளில் இல்லை.
கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நேரடி சோதனையின்போது, கல்லூரிகளில் கட்டடம், நூலகம், ஆய்வக வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளில் முறைகேடுகள் நடந்திருப்பதையும், ஏஐசிடிஇ விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மீறி இந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது
Leave a Reply